`கர்ப்பிணிகளுக்காக மருத்துவமனை வளாகத்தில் காய்கறித் தோட்டம்!’ - அசத்தும் அரசு மருத்துவர்

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக வரும் கர்ப்பிணிகள், பிரசவம் ஆன தாய்மார்கள், குடும்பக் கட்டுப்பாடு செய்துகொண்ட பெண்கள் ஆகியோரின் நலனில் அக்கறைகொண்டு, மருத்துவமனை வளாகத்திலேயே தோட்டம் அமைத்து காய்கறிகள் மற்றும் கீரைகளைப் பயிர்செய்து, அவற்றை சிகிச்சைக்காக வரும் பெண்களுக்கு சமைத்து  உணவாகக் கொடுத்து அசத்துகிறார்கள்.

பட்டுக்கோட்டை அருகே உள்ள செருவாவிடுதியில் அமைந்துள்ளது, அரசு ஆரம்ப சுகாதார நிலையம். பளபள கட்டடங்கள், எங்கு பார்த்தாலும் மரங்கள், செடிகள் எனப் பசுமை சூழ காணப்படுவதால், இங்கு செல்பவர்களுக்கு மருத்துவமனைக்கு வந்திருக்கிறோம் என்பதையும் தாண்டி பூங்காவுக்கு வந்த உணர்வையே கொடுக்கும். இங்கு சிகிச்சை என்பது இரண்டாம் பட்சம்தான். முதலில் அனைத்தும் சுத்தமாக இருக்க வேண்டும் என அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு வலியுறுத்தி, அவற்றைப் பராமரித்து, மேற்சொன்ன அனைத்தையும் சாத்தியமாக்கியிருக்கிறார், டாக்டர் சௌந்தரராஜன்.

டாக்டர் சௌந்தரராஜனிடம் பேசினோம், ``சுற்றிலும் கிராமங்கள் நிறைந்த பகுதி என்பதால், சிகிச்சைக்காக வரும் கர்ப்பிணிப் பெண்கள் சத்தான உணவு சாப்பிடுவதில் அக்கறை காட்டுவதில்லை. முதலில், என்னென்ன காய்கறிகளில் என்ன வகையான சத்துக்கள் கிடைக்கின்றன என்பதை எடுத்துக் கூறி, அவற்றைச் சாப்பிட வேண்டும் என வலியுறுத்திவந்தேன். இது உங்களுக்கு மட்டும் இல்லை, உங்கள் வயிற்றில் வளரும் குழந்தைக்காகவும். எனவே, சத்தான உணவுகளைச் சாப்பிட வேண்டும் எனக் கூறுவேன். மேலும், சிசு மரணங்கள், பிரசவத்தின்போது உயிரிழக்கும் கர்ப்பிணிகள் என அனைத்தும் கர்ப்பகாலத்தில் சத்தான உணவு சாப்பிடாமல் இருப்பதாலேயே ஏற்படுகிறது என்பதையும் விளக்குவேன். இதனால், இப்பகுதி பெண்களுக்கு நல்ல விழிப்பு உணர்வு ஏற்பட்டது. அதோடு, சத்தான உணவை சாப்பிட மட்டுமே சொல்கிறோம். இங்கேயே சாப்பிட வைத்தால் என்ன என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது.

உடனே மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஒரு ஏக்கர் நிலத்தை ஊழியர்கள் உதவியுடன் தயார்செய்தேன். அதில், தோட்டம் அமைத்து இயற்கை முறையில் அவரை, பாகற்காய், புடலை, சுரக்காய், பரங்கி போன்ற காய்கறி வகைகள் மற்றும் பொன்னாங்கண்ணி, அகத்திக் கீரை, வல்லாரை, புளிச்சக் கீரை, தண்டுக் கீரை ஆகியவற்றைப் பயிர்செய்தேன். நாங்கள் இங்கேயே இரண்டு மாடுகள் வளர்க்கிறோம். அதன் சாணத்தை உரமாகப் பயன்படுத்தியதால் நல்ல முறையில் காய்கள் காய்த்தன. கீரைகளும் நன்கு செழித்து வளர்ந்தன. சீசனுக்குத் தகுந்தார்ப்போல காய்கறிகள் காய்க்கின்றன. இந்தக் காய்கறிகளைப் பயன்படுத்தி, செவ்வாய்க்கிழமை சிகிச்சைக்காக வரும் கர்ப்பிணிப் பெண்களுக்கு, உணவு சமைத்து அவர்களை சாப்பிட வைத்தோம். அதுமட்டுமில்லாமல், பிரசவம் ஆன பெண்கள், குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சைக்கு வரும் பெண்கள் என அனைவருக்கும் இங்கு தங்கியிருக்கும் நாள்களில், இங்கு விளையும் காய்கறிகளை வைத்து சமைத்துச் சாப்பிட வைக்கிறோம். சமையலுக்குத் தேவைப்படும் மற்ற பொருள்களுக்கு நல்லெண்ணம் படைத்த பலர் உதவி செய்கிறார்கள். கடந்த 6 மாதமாக, நாங்கள் இதுபோன்று காய்கறிகளைப் பயிர்செய்து பயன்படுத்துகிறோம்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் இங்கு வந்த கலெக்டர் அண்ணாத்துரை, காய்கறித் தோட்டம் மற்றும் இந்த வளாகம் முழுவதையும் சுற்றிப் பார்த்துவிட்டு எங்களைப் பாராட்டினார். அதோடு, இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக இங்கேயே தங்கியிருந்து, இங்கு சமைத்த உணவையே சாப்பிட்டார். அப்போது, எங்க முயற்சி ஜெயிச்சிட்டாதாக நினைத்து நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம். அப்போது கலெக்டர், வேலை ஆட்களுக்கு என்ன செய்கிறீர்கள் எனக் கேட்க, மருத்துவமனை ஊழியர்களையே பயன்படுத்துகிறோம் என்று கூறினேன். உடனே, நூறு நாள் வேலை பார்க்கும் 5 பெண்களை இங்கு பணி செய்ய உத்தரவிட்டார். சத்தான உணவு சாப்பிட்டாலே பாதி நோய்கள் மனிதர்களை நெருங்காது. அதை இங்கு சிக்கிச்சைக்கு வருபவர்களுக்குக் காட்டுவதற்கே இதுபோன்று செய்கிறோம்’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!