எஃப்.ஐ.ஆர் பதிய நீதிமன்றம் செல்லும் நிலை! - மருத்துவரின் சட்டப் போராட்டம்

``என் இதயத்தில் கசிந்த ரத்தத்துக்கு, உங்களது ரத்தம் பயன்படாது” இது கல்பாக்கம் மருத்துவர் புகழேந்தியின் வலி மிகுந்த வார்த்தைகள். தனக்கு இழந்த அநீதிக்கும் எதிராக முதல் தகவல் அறிக்கை தாக்கல் (FIR) செய்ய பல்வேறு போராட்டங்களை கடந்துள்ளார்.

புகழேந்தி

மருத்துவர் புகழேந்தி கல்பாக்கம் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக கிராமப்புற மருத்துவ சேவையை மேற்கொண்டு வருகிறார். வாடகை கட்டடத்தில் மருத்துவமனையை நடத்தி வருகிறார். புகழேந்திக்கும், கட்டட உரிமையாளர் மனோகரனுக்கும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. மருத்துவரை அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்காக சில வேலைகளை செய்துள்ளார். மேலும், வாடகை பெறாமலும் இருந்துவந்துள்ளார். இதனால் பொறுமையிழந்தவர் நீதிமன்றத்தை நாடினார். வழக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அவர் தற்போது கட்டடத்துக்கான வாடகையை நீதிமன்றத்தில் செலுத்தி வருகிறார். 

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆட்கள் இல்லாத வேளையில் மருத்துவமனைக்குத் திடீரென வந்த ஒரு கும்பல், மேற்கூரைகளை பிரித்துப்போட்டுள்ளது. அக்கம்பக்கத்தினர் மருத்துவருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த மருத்துவர் புகழேந்தி, அந்த நபர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள், அங்கிருந்து சென்றுவிட்டனர். இந்தக் காட்சிகள் அனைத்தையும் மருத்துவரின் உதவியாளர் படம் பிடித்துள்ளார். இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அங்கு நடவடிக்கை எடுக்கப்படாததால், மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்குத் தெரியப்படுத்தியுள்ளார். அங்கிருந்தும் பதில் இல்லாததால், திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம், மனுதாரர் அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்வதற்கான முகாந்திரம் இருக்கிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, ஒரு மாத காலத்துக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய மருத்துவர் புகழேந்தி   ``மருத்துவமனை தாக்கப்பட்டது குறித்து சதுரங்கப்பட்டினம் காவல்நிலையத்தில் வீடியோ ஆதாரத்துடன் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு இ-மெயில் மூலம் தகவல் தெரிவித்தேன். தனக்கு கீழ் பணியாற்றும் ஒரு காவல் ஆய்வாளரை என்னவென்று கூட கேட்கமாட்டாரா? அவரிடம் இருந்தும் பதில் இல்லை. இதுதொடர்பாக திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தை நாடினேன். தற்போது எனக்குச் சாதகமாக நீதிமன்றத்தில் இருந்து ஆணை வந்துள்ளது. ஒரு முதல் தகவல் அறிக்கையை (FIR) தாக்கல் செய்ய இத்தனை தடைகளை கடக்க வேண்டியிருக்கிறது என்ற ஆதங்கம்தான் எனக்கு. கடந்த சில நாள்களுக்கு முன் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ரத்ததான முகாமில் ரத்தம் கொடுத்தார். மருத்துவமனை இடிக்கப்பட்டபோது என் இதயத்தில் ரத்தம் கசிந்தது. அந்த ரத்தத்துக்கு உங்கள் ரத்தம் பயன்படாது என சொல்லிக்கொள்கிறேன். எனக்கு நீதி கிடைத்தற்காக மகிழ்ச்சி தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!