தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்க உத்தரவு..! இந்திய மாணவர் சங்கம் வரவேற்பு

சி.பி.எம்.கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தொடுத்த வழக்கில், நீட் தேர்வில் தமிழில் தேர்வெழுதிய மாணவர்களுக்குத் தவறாக மொழிபெயர்க்கப்பட 49 வினாக்களுக்கும் 196 மதிப்பெண்கள் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளதை இந்திய மாணவர் சங்கம் வரவேற்றுள்ளது.

நீட் தேர்வு

``பலதரப்பட்ட பண்பாடு, மொழி, வாழ்வியல் சூழல் உள்ள நம் தேசத்தில் ஒரே மாதிரியான கல்வியைப் புகுத்தும் பாசிச நடவடிக்கையின் துவக்கமாக, நீட் தேர்வை அனைத்து மாநிலங்களுக்கும் பா.ஜ.க அரசு புகுத்தியது. இந்த நீட் தேர்வின் அநீதியால் பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்தும் மருத்துவம் பயில இயலாமல் போனதால் தமிழகத்தில் மட்டும் கடந்தாண்டு அனிதாவும், இந்தாண்டு பிரதீபா மற்றும் சுபஸ்ரீ என்ற மாணவிகளும் தற்கொலை செய்து இறந்து போனார்கள்.

நாடு முழுவதும் கடந்த மே 6-ல் நடைபெற்ற நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடப்பிரிவுகளிலிருந்து 180 கேள்விகள் கேட்கப்பட்டன. ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு பதில்கள் அளிக்கப்பட்டு, அதில் சரியான பதிலை தேர்வு செய்ய வேண்டும் என்றிருந்தது. அதில் தமிழில் தேர்வெழுதிய 24,000 பேருக்கும் கேட்கப்பட்ட தமிழ் வினாத்தாளில் மட்டும் 49 வினாக்கள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டிருந்தன. இதைத் தொடர்ந்து தவறாக மொழி பெயர்க்கப்பட்ட 49 வினாக்களுக்கும் தலா 4 மதிப்பெண் வீதம் 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க உத்தரவிட வேண்டும் எனக்கோரி இத்தேர்வை நடத்திய மத்திய இடைநிலை வாரியத்தின் பாகுப்பாட்டை கண்டித்து தொடர் போராட்டங்கள் நடைபெற்றது. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே ரங்கராஜன், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் சி.டி.செல்வம், பஷீர் அகமது அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்குத் தவறாக மொழி பெயர்க்கப்பட்டிருந்த ஒவ்வொரு கேள்விக்கும் தலா 4 மதிப்பெண்கள் வீதம் 196 மதிப்பெண்கள் வழங்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர். 2 வாரத்துக்குள் புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இத்தீர்ப்பு பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும், போராடும் மாணவர் இயக்கங்களுக்கும் தமிழக மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இவ்வழக்கை தொடுத்த தோழர் டி.கே ரங்கராஜன் எம்.பி அவர்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும்  வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்" என்று இந்திய மாணவர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!