வெளியிடப்பட்ட நேரம்: 03:20 (11/07/2018)

கடைசி தொடர்பு:08:27 (11/07/2018)

ஆற்றைக் கடக்க முடியாமல் அவதிப்பட்ட பள்ளி மாணவர்கள்..! பாலம் அமைத்து சாதித்த கிராம இளைஞர்கள்

இனியும் அரசையும், அதிகாரிகளையும் நம்பி பயனில்லை என முடிவெடுத்த இளைஞர்கள் அதிரடியாக தங்களுக்குள்ளேயே சுமார் 20 ஆயிரம் ரூபாய் வரை பணம் வசூலித்து அதிரடியாக பாலம் கட்டும் பணியை துவங்கி ஒரே நாளில் முடித்து விட்டனர்.

சிதம்பரம் அருகே உள்ளது ஜெயங்கொண்டபட்டினம் கிராமம். பழைய கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் உள்ள இக்கிராமத்தில் அரசு துவக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன. பழைய கொள்ளிடம் ஆறு மற்றும் புதிய கொள்ளிடம் ஆறுகளின் நடுவே தீவு போன்ற சில கிராமங்கள் உள்ளன. அந்தக் கிராமத்துக்கு அக்கரையில் ஜெயங்கொண்டபட்டினம், கீழகுண்டலபாடி, திட்டுக்காட்டுர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் சுமார் 600 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த 3 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆற்றின் மற்றொரு புறத்தில் உள்ள ஜெயங்கொண்டபட்டினம் கிராமப் பள்ளியில் படித்து வருகின்றனர்.

சிதம்பரம்

இவர்கள் தினமும் பள்ளிக்குச் செல்ல ஆற்றுத் தண்ணீரில் இறங்கிச் சென்று வந்தனர். வேறு வழியாக செல்ல வேண்டும் என்றால் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. நீண்ட தூரம் நடந்து செல்வது மாணவர்களுக்கு சிரமமாக இருப்பதால், தினமும் ஆற்றில் இறங்கியே செல்லும் ஆபத்தான நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டனர். ஆற்றைக் கடந்து அக்கரைக்குச் செல்ல சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் அப்பகுதியில் சிறிய நடைப்பாலம் ஒன்று கட்டப்பட்டது.

ஆனால், இது கட்டப்பட்ட மூன்றே ஆண்டுகளில் ஆற்றில் ஏற்பட்ட கடும் வெள்ளம் காரணமாக இந்தப் பாலம் அடித்துச் செல்லப்பட்டது. அதுமுதல் கடந்த 7 வருடங்களாக இந்தக் கிராமங்களிலிருந்து ஜெயங்கொண்டபட்டினம் பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் ஆற்றில் இறங்கித்தான் சென்று வருகின்றனர். இதுபோல் அக்கரைக்குச் செல்லும் பொதுமக்களும் ஆற்றில் இறங்கித்தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. தண்ணீர் அதிகமாக ஓடும் நேரங்களில் பள்ளி மாணவர்களைப் பெற்றோர்கள் தூக்கிக் கொண்டு அக்கரைக்குச் செல்லும் நிலையும் இருந்து வந்தது. மழை மற்றும் வெள்ளக் காலங்களிலும், ஆற்றில் முதலைகள் அதிகம் நடமாட்டம் உள்ள நேரங்களிலும் மாணவர்கள் தினம், தினம் ஆற்றில் இறங்கி பள்ளிக்குச் செல்வது சவாலான பயணமாகவே இருந்துள்ளது. 7 ஆண்டுகளுக்கு முன்பு இடிந்து விழுந்த நடைப்பாலத்தை மீண்டும் கட்டித்தர வேண்டும் என 3 கிராம மக்களும் சிதம்பரம் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும், குமராட்சி வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகளுக்கும் மனு அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. நாளுக்கு நாள் மாணவர்கள் மேற்கொள்ளும் ஆபத்தான பயணத்துக்கு முடிவு கட்ட இக்கிராம இளைஞர்கள் முடிவு செய்தனர்.

சிதம்பரம்

இனியும் அரசையும், அதிகாரிகளையும் நம்பி பயனில்லை என முடிவெடுத்த இளைஞர்கள் அதிரடியாக தங்களுக்குள்ளேயே சுமார் 20 ஆயிரம் ரூபாய் வரை பணம் வசூலித்து அதிரடியாக பாலம் கட்டும் பணியை துவங்கி ஒரே நாளில் முடித்துவிட்டனர். பழைய கொள்ளிடம் ஆற்றில்  திரண்ட கிராமத்து இளைஞர்கள், ஆற்றில் பழைய நடைப்பாலம் இருந்த இடத்தில் சிமென்ட்டால் ஆன பில்லர்களை அமைத்து, அதன்மேல் மூங்கில் கழிகளால் நடைப்பாலத்தை கட்டத் துவங்கினர். ஆர்வத்துடனும், சுறுசுறுப்புடனும் தன்னம்பிக்கையுடன் கட்டத் துவங்கியதால், காலையில் துவங்கிய இந்த நடைப்பாலம் கட்டும் பணிகள் மாலையிலேயே முடிவடைந்து விட்டன.  இளைஞர்கள் நினைத்தால் எதையும் சாதிக்கமுடியும் என்பதை இந்தத் தீவு கிராம இளைஞர்கள் நாட்டுக்கு உணர்த்தியுள்ளனர்.