வெளியிடப்பட்ட நேரம்: 05:30 (11/07/2018)

கடைசி தொடர்பு:07:56 (11/07/2018)

திண்டுக்கல் - திருச்சியை இணைக்கும் ரிங்ரோடு விவகாரம்..! ஒத்திவைத்த உயர் நீதிமன்றம்

சாலைகள் இணைப்பது தொடர்பான வழக்கு இரண்டு வாரத்துக்கு ஒத்திவைப்பு !

திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தால் வெளியிட்ட வாடிப்பட்டி - சிட்டம்பட்டி ரிங்ரோடு திட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை இரு வாரத்துக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் சுவாமிநாதன் என்பவர் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், 'தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் 750 கோடி ரூபாய் செலவில் வாடிப்பட்டி - சிட்டம்பட்டி ரிங்ரோடு அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது. வாடிப்பட்டி - சிட்டம்பட்டி ரிங் ரோடு அமைப்பதால் 540 ஏக்கர் பரப்பளவில் நஞ்சை, புஞ்சை, கிணறுகள், கண்மாய்கள் மற்றும் வீடுகள் பாதிக்கப்படும்.

இந்த ரிங்ரோடு திட்டத்தை அமல்படுத்தினால் 100 விவசாயக் கிணறுகள், கண்மாய்கள் அழிக்கப்படுவதுடன் 5,000 க்கும் அதிகமான விவசாயிகள் வேலை இழந்து வாழ்வாதாரம் கேள்விக் குறியாகிவிடும். எனவே, ஏப்ரல் 17-ம் தேதி தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தால் வெளியிட்ட வாடிப்பட்டி - சிட்டம்பட்டி ரிங்ரோடு திட்ட அரசாணையை ரத்து செய்து மாற்று வழியில் ரிங்ரோடு திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு இன்று நீதிபதிகள் செல்வம், பஷீர் அகமது அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை இரு வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.