வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (11/07/2018)

கடைசி தொடர்பு:07:53 (11/07/2018)

4 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியது சிறுவாணி அணை..! மகிழ்ச்சியில் கோவை மக்கள்..!

கோவையின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணை, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியுள்ளது.

கோவையின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணை, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியுள்ளது.

சிறுவாணி

கோவைக்கு இது பொற்காலம். கோவையில், கடந்த கோடை காலத்திலேயே நல்ல மழை பெய்தது. குறிப்பாக, 100 ஆண்டுகளுக்குப் பின் கோவையில் கோடை மழை கொட்டி தீர்த்தது. தற்போது, அதே வேகத்தில் தென்மேற்குப் பருவமழையும் பட்டையைக்  கிளப்பி வருகிறது. தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக, கோவையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களான, சிறுவாணி மற்றும் பில்லூர் அணைகள் முழு கொள்ளளவையும் எட்டி, நிரம்பி வழிகிறது. முக்கியமாக, கடந்த 2014-ம் ஆண்டுக்குப் பிறகு, 4 ஆண்டுகள் கழித்து சிறுவாணி அணை நிரம்பியுள்ளது.

இதேபோல, சோலையாறு உள்ளிட்ட கோவையின் மற்ற அணைகளும் நிரம்பியுள்ளன. நிரம்பி வழியும் கூடுதல் நீர், பவானி ஆறு, பவானி சேகர் மற்றும் பரம்பிக்குளம் அணைகளுக்கு அனுப்பப்படும். இந்நிலையில், கோவையில் வருகிற 20-ம் தேதி வரை தொடர்ந்து மழை பெய்யும் என்று கோவை வெதர்மேன் கூறியிருக்கிறார். இதனால், அடுத்த ஆண்டு மே மாதம் வரை, கோவையில் குடிநீர் பிரச்னை இருக்காது என்று கூறப்பட்டுள்ளது.

சிறுவாணி

தொடர் மழை காரணமாக, கோவை மாவட்டம், வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு, தொடர்ந்து மூன்றாவது நாளாக, புதன் கிழமையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நிலத்தடி நீர் அதிகரிக்கும் என்பதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழை நீரை சேரிப்போம்... மகிழ்ச்சியாக இருப்போம்.