கல்வித்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படும்..! அமைச்சர் செங்கோட்டையன் உறுதி | Minister Sengkottain said school education reforms

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/07/2018)

கடைசி தொடர்பு:07:43 (11/07/2018)

கல்வித்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படும்..! அமைச்சர் செங்கோட்டையன் உறுதி

ஒரு மாதத்தில் பள்ளிக் கல்வித் துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படும். வாரத்துக்கு ஒரு முறை அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் வாசிப்பு பழக்கத்தை மாணவர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் அரசாணை வெளியிடப்படும் என மாநிலக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

                                               
 
அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாவட்ட தமிழ்ப் பண்பாட்டு பேரமைப்பு மற்றும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சார்பில் 4-ம் ஆண்டு புத்தகத்திருவிழா நேற்று தொடங்கியது. புத்தகத் திருவிழாவை மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்து புத்தக அரங்குகளைப் பார்வையிட்டார். பின்னர் நடைபெற்ற விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பேசும்போது, 'பள்ளிக்கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது மத்திய அரசின் பணியாளர் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் உள்ளது. புத்தக வாசிப்பு என்பது ஒருவனைக் கல்வியில் சிறந்தவனாகவும் ஒழுக்கமுள்ளவனாகவும் மாற்றுகிறது. வாரத்துக்கு ஒரு முறை அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் வாசிப்பு பழக்கத்தை மாணவர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் அரசாணை வெளியிடப்படும். படிக்கப் படிக்க மாற்றங்கள் புதிய சிந்தனைகள் ஏற்படும். மூச்சு நின்றால் மட்டும் மரணமல்ல. முயற்சி இல்லையென்றாலும் மரணம்தான். மாணவர்கள் தொடர்ந்து முயற்சி செய்யப்படும். கல்வித்துறையில் இந்தியாவுக்கு முன்னோடி மாநிலமாகத் தமிழகம் உள்ளது.

                              

3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 11,12-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு இன்டர்நெட் வசதியுடன் கம்யூட்டர் வசதி செய்து தரப்படும். அதேபோல் 2012-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டுகளுக்கு வெயிட்டேஜ் முறை இல்லாமல் ஆசிரியர்கள் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும்.

                                   

நம்முடைய பள்ளி கல்வித் துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படும். இப்பணிகள் ஒரு மாதத்தில் தொடங்கும். வெயிட்டேஜ் ரத்து அரசாணை வெளியிட்டு 7 நாள்கள் ஆகிறது. புத்தகக் கண்காட்சியை அரசு ஏற்று நடத்துவது சுலபம் அல்ல. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கம் மூலம் நடத்தப்படும் புத்தகக் கண்காட்சிக்கு அரசு பெரிதும் உதவி வருகிறது. இவ்வகையான புத்தக கண்காட்சியிலிருந்து அரசு நூலகங்களுக்குத் தேவையான சிறந்த நூல்களைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார்.