வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (11/07/2018)

கடைசி தொடர்பு:07:45 (11/07/2018)

வீட்டைவிட உயரமாக அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால்..! தவிக்கும் பொதுமக்கள்

மழைநீர் வடிகால்

கோவை முத்தண்ணன்குளம் பகுதியில் உள்ள குடியிருப்புகளைப் பொருட்படுத்தாமல் அங்கு வசிக்கும் மக்கள் வீட்டுக்குள் நுழைய முடியாதடி மழைநீர் வடிகால் அமைத்து அதிர்ச்சி கொடுத்திருக்கிறது கோவை மாநகராட்சி.

கோவை  தடாகம் சாலையில் இருக்கிறது முத்தண்ணன்குளம். 21-வது வார்டுக்கு உட்பட்ட இந்தப் பகுதியில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட
குடியிருப்புகள் இருக்கின்றன. எளிய மக்கள் வாழும் இந்தப் பகுதியில் மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது. சுமார் 2 கி.மீ அளவுக்கு கட்டப்பட்டிருக்கும் மழை நீர் வடிகால், சாலையைவிட இரண்டு அடி உயரமாகவும் குடியிருப்புகளின் நுழைவாயிலை மறைத்து  நான்கு அடி உயரத்திலும் கட்டப்பட்டிருப்பதால் அந்தப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

மழை நீர் வடிய வழியின்றி சாலையை ஆக்கிரமிப்பதோடு, மழை நீர் வீடுகளுக்குள் புகுந்துவிடுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், வீட்டின் முகப்பை மறைத்து தரை தளத்தைவிட அதிக உயரத்தில் வடிகால் கட்டியிருப்பதால் வீட்டுக்குள் நுழைந்து வெளியேற முடியாமல் தவிக்கிறார்கள் அப்பகுதி மக்கள். சுமார் நான்கு தலைமுறைகளாக அங்கு வசித்து வருபவர்கள் தற்போது இந்த மழைநீர் வடிகாலால் அங்கு வசிக்க முடியாத சூழல் நிலவுகிறது.

குழந்தைகள் மற்றும் வயதானவர்களைக் கொண்ட குடும்பத்தினர் தற்போது அங்குள்ள வீட்டைக் காலி செய்து வேறு  இடங்களுக்கு செல்லும் நிலைக்கு ஆளாகியுள்ளார்கள். மாநகராட்சி அதிகாரிகள் அங்கு வாழும் மக்களின் நிலையை உணர்ந்து மழைநீர் வடிகாலை மக்களுக்குப் பாதிப்பில்லாத வகையில் மாற்றியமைக்க வேண்டும் என்று கண்ணீருடன் கோரிக்கை வைக்கிறார்கள்.