வெளியிடப்பட்ட நேரம்: 08:45 (11/07/2018)

கடைசி தொடர்பு:08:45 (11/07/2018)

மும்பையில் இருந்து மதுரைக்கு விரைவில் நேரடி விமான சேவை - பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்!

மும்பையிலிருந்து மதுரை விமான நிலையத்துக்கு நேரடி விமான சேவை விரைவில் தொடங்கும் என மத்திய அமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பொன்.ராதாகிருஷ்ணன்

மதுரை விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா விமானம் சென்னை வழியாக மும்பைக்கு இயக்கப்பட்டு வந்தது. கடந்த 42 ஆண்டுகளாக நடந்துவந்த இந்தப் பயணிகள் விமான சேவை எந்தக் காரணமும் கூறப்படாமல் நாளையுடன் (12-ம் தேதி) நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், 20 நாள்களுக்குப் பிறகு இந்த விமானம் மீண்டும் இயக்கப்படுவதாகவும். மும்பையிலிருந்து மதுரைக்கு நேரடி விமான சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். இதுகுறித்து மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``மதுரையிலிருந்து சென்னை வழியாக மும்பைக்கு இயக்கப்பட்ட ஏர் இந்தியா விமான சேவை நிறுத்தப்படுவதாக எனக்குத் தகவல் கிடைத்ததை அடுத்து மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் சுரேஷ்பிரபு, இணை அமைச்சர் மற்றும் ஏர் இந்தியா அதிகாரிகளுக்குத் தனித்தனியாக கடிதம் எழுதினேன். அந்தக் கடிதத்தில் மதுரையிலிருந்து சிங்கப்பூருக்கு நேரடியாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை நடைபெற்று வருகிறது எனவும். மத்திய அரசு ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கீட்டில் மதுரையில் அமைக்க இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் மதுரை ராமேஸ்வர சுற்றுலாத்தலங்கள் ஆகியவற்றையும் கடிதத்தில் சுட்டிக் காட்டினேன்.

ஏர் இந்தியா விமானம்

எனவே, மதுரையிலிருந்து சென்னை வழியாக மும்பைக்குச் செல்லும் விமான சேவையை நிறுத்தக்கூடாது, என வலியுறுத்தினேன். இதையடுத்து ஹஜ் புனிதப் பயணம் நடைபெற்று வருவதால் சென்னை வழியாக மதுரையிலிருந்து மும்பை செல்லும் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 20 நாள்களுக்குள் பின் மீண்டும் இந்த விமானம் இயக்கப்படும். அதுமட்டுமல்லாது விரைவில் மும்பையிலிருந்து மதுரைக்கு நேரடி ஏர் இந்தியா விமான சேவை தொடங்குவது குறித்து பரிசீலிப்பதாகவும் விமானப் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். எனவே, 20 நாள்களுக்குப் பிறகு மதுரையிலிருந்து சென்னை வழியாக மும்பைக்கு விமான சேவை மீண்டும் தொடங்கும். அதுபோல மும்பையிலிருந்து மதுரைக்கு நேரடி ஏர் இந்தியா விமான சேவையும் விரைவில் தொடங்கும்" இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.