வெளியிடப்பட்ட நேரம்: 09:45 (11/07/2018)

கடைசி தொடர்பு:09:45 (11/07/2018)

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் வெண்கலச் சிலை திடீர் மாயம்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஒன்றரை அடி வெண்கல தண்டாயுதபாணி சிலை மற்றும் முக்கால் அடி சூலம் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் கோயில் இணை ஆணையர் ஞானசேகர்.

வெண்கல சிலை மாயமான திருவண்ணாமலை கோயில்

மலையே ஈசனாகக் காட்சியளிக்கும் மலை திருவண்ணாமலை. உலகப் பிரசித்திபெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் உள்ள வெண்கல தண்டாயுதபாணி சிலையும் வெண்கல வேலும் காணவில்லை எனப் புகார் அளித்துள்ளார் இணை ஆணையர் ஞானசேகர். இது குறித்து அவர் கூறுகையில், ``கடந்த ஒரு மாதகாலமாக கோயிலில் உள்ள சிலைகளைக் கணக்கெடுத்தோம். அதன் எடை, உயரம், அகலம் என எல்லாம் சரியாக உள்ளதா என்று பார்த்தோம். 1954-ம் ஆண்டு, முதல் முறையாகக் கோயில் சொத்துகளைக் கணக்கெடுத்து அதை ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அந்தப் பதிவேட்டின்படி கோயிலில் உள்ள சிலைகளின் எண்ணிக்கை மொத்தம் 164 என்று உள்ளது.

நாங்கள் அந்தச் சிலைகள் சரியாக உள்ளதா எனக் கணக்கெடுத்தோம். அந்தக் கணக்கெடுப்பின்போதுதான் தெரிந்தது வெண்கல தண்டாயுதபாணி சிலை மற்றும் வேல் காணவில்லை என்று. இந்தச் சிலைகள் எப்பொழுது காணாமல் போனது என்று தெரியவில்லை. கோயில் முழுவதும் தேடிப் பார்த்தோம் கிடைக்கவில்லை. இதற்கு முன்பு இருந்த இணை ஆணையர்கள், சிலைகள் கணக்கெடுப்பை எழுதி வைக்காமல் முதன் முதலில் தயாரிக்கப்பட்ட பதிவேட்டில் டிக் மட்டும் அடித்துவிட்டுச் சென்றுள்ளனர். கணக்கெடுத்தவர்கள் அதைப் பதிவேட்டில் எழுதியிருந்தால் சிலை எப்பொழுது காணாமல் போனது என்று தெரிந்திருக்கும். இதற்கு முன்பு எப்பொழுது எல்லாம் கணக்கு எடுத்தார்கள் என்பது தெரியவில்லை. சிலை இல்லை என்பது மட்டும் உறுதி. சிலை குறித்து திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளோம். இப்பொழுது கோயிலில் வெண்கலச் சிலை, செம்புச்சிலை, ஐம்பொன்சிலை என மொத்தம் 162 சிலைகள் உள்ளன. இந்தச் சிலைகள் அனைத்தையும் உயரம், எடை, புகைப்படத்துடன் பதிவேடு செய்திருக்கிறோம்" என்று கூறினார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க