இறந்த தாயின் உடலை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற மகன்! | Son ties mom’s body to bike, drives it for postmortem

வெளியிடப்பட்ட நேரம்: 11:00 (11/07/2018)

கடைசி தொடர்பு:11:00 (11/07/2018)

இறந்த தாயின் உடலை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற மகன்!

மருத்துவமனை நிர்வாகம் அமரர் ஊர்தி வழங்க முன்வராததால் இறந்த தாயை பிரேதப் பரிசோதனைக்கு இருசக்கர வாகனத்தில், மகன் கொண்டு சென்ற அவலம் ஹரியானா மாநிலத்தில் நடந்துள்ளது.

மகன்

ஹரியானா மாநிலம் மஸ்தபூர் கிராமத்தில் வசித்து வருபவர் குன்வர் பாய். இவர் நேற்று முன்தினம் பாம்பு கடித்து மயங்கி விழுந்துள்ளார். அப்போது அவரை உடனடியாக அருகிலுள்ள மொஹங்கரத் என்ற சுகாதார மையத்துக்கு அவரின் மகன் கொண்டு சென்றுள்ளார். மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்ட அவர் வழியிலே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து அவரின் மகன் ராஜேஷ் என்பவர் தாயின் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனை நிர்வாகத்திடம் அமரர் ஊர்தி கேட்டுள்ளார். ஆனால், நிர்வாகம் தர மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து உறவினர் ஒருவரின் உதவியுடன் இறந்த தாயின் உடலை, இருசக்கர வாகனத்தில் 35 கிலோ மீட்டர் பயணம் செய்து பிரேதப் பரிசோதனை செய்யும் இடத்துக்கு ராஜேஷ் கொண்டு சென்றுள்ளார். இது குறித்து அம்மாவட்ட ஆட்சியர் கூறுகையில் `ராஜேஷ், அவரின் தாய்க்கு பாம்பு கடித்ததும் மருத்துவமனைக்கு எடுத்துவராமல் குணமாகிவிடும் என்ற நம்பிக்கையில் கோயிலுக்கு எடுத்துச் சென்றுள்ளார். அவர்  மருத்துவமனைக்குத் தாமதமாக கொண்டு வந்த காரணத்தால்தான் மருத்துவர்களால் அவரின் தாயைக் காப்பாற்ற முடியவில்லை' என்று தெரிவித்தார்.