`விபத்தால் என் வாழ்க்கையே தொலைந்துவிட்டது'- தமிழக அரசின் அலட்சியத்தால் ஜவுளி வியாபாரி கண்ணீர்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை அடுத்துள்ள பாகலூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர், பெங்களூரு சந்தாபுரத்தில் டெக்ஸ்டைல் பிசினஸ் செய்து வந்துள்ளார். கடந்த 2000-வது ஆண்டு தமிழக அரசுப் பேருந்து விபத்தில் சிக்கி கை, கால் மற்றும் இடுப்பில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்துக்குப் பிறகு கிருஷ்ணமூர்த்தியின் மொத்த வாழ்வும் முடங்கிப்போய் திசை மாறிப்போனது. 

தமிழ்நாடு அரசு பேருந்து

இதனால், தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்திடம் உரிய இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு 9.5 லட்சம் ரூபாய் கிருஷ்ணமூர்த்திக்கு இழப்பீடு வழங்க பெங்களூரு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால், தமிழக போக்குவரத்துத் துறை இழப்பீடு வழங்காமல் தொடர்ந்து கால தாமதம் செய்து வந்துள்ளது. கோபம் அடைந்த நீதிபதி, தமிழக அரசுப் பேருந்தை ஜப்தி செய்து கிருஷ்ணமூர்த்தியிடம் வழங்கிவிட்டார். கடந்த பத்து மாதங்களாகப் பேருந்து கிருஷ்ணமூர்த்தியின் வசம் இருந்து வருகிறது. ஆனாலும், தமிழக போக்குவரத்துத்துறை தங்களின் இயலாமையைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. 

பேருந்தின் தற்போதைய சந்தை மதிப்பை மதிப்பீடு செய்த கிருஷ்ணமூர்த்திக்குப் பெரும் அதிர்ச்சிதான் ஏற்பட்டது. காரணம், பேருந்தின் தற்போதைய சந்தை மதிப்பு வெறும் 5 லட்சம் ரூபாய் மட்டுமே என்பதுதான். இந்த ஆவணங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு மீண்டும் நீதிமன்றம் சென்றுள்ளார் கிருஷ்ணமூர்த்தி. 

இது தொடர்பாக கிருணஷ்மூர்த்தி நம்மிடம் பேசும்போது, இந்த விபத்தால் என் வாழ்க்கையையே தொலைத்துவிட்டு இருக்கிறேன். இனி என்னால் உழைத்து வாழ முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இந்த நிலையில் 1 லட்ச ரூபாய் செலவு செய்து உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் எனக்கான இழப்பீடு வழங்காமல் காலதாமதம் செய்து வருவது மிகவும் வேதனை அளிக்கிறது'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!