நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் - மேல்முறையீடு செய்ய சி.பி.எஸ்.இ முடிவு

நீட் தேர்வு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய சி.பி.எஸ்.இ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

நீட்

மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் இரண்டு வருடங்களாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்று அடுத்த சில நாள்களிலேயே அதன் முடிவுகளும் அறிவிக்கப்பட்டன. பின்பு இந்த கல்வியாண்டுக்கான மருத்துவ தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு கடந்த  ஜூலை 1-ம் தேதி தொடங்கி 7-ம் தேதி வரை முதல் கட்ட  கலந்தாய்வும் நடந்து முடிந்துள்ளது. இதில் தேர்வான மாணவர்கள் தங்களுக்கான கல்லூரிகளைத் தேர்வு செய்து தற்போது அதில் சேரவும் தொடங்கிவிட்டனர். 

இந்நிலையில், நீட் தேர்வின்போது தமிழ் வினாத்தாளில் 49 மதிப்பெண்கள் தவறாக இருந்ததால் கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே ரங்கராஜன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்னதாக பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் ‘தமிழில் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் 196 மதிப்பெண்களை வழங்க வேண்டும்; இந்த மதிப்பெண்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு இரண்டு வாரக் காலத்துக்குள் புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு கலந்தாய்வு நடத்த வேண்டும்’ என உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

மருத்துவ சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய சி.பி.எஸ்.இ முடிவு செய்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.  

இதற்கு முன்னதாக, நீட் தேர்வில் உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சி.பி.எஸ்.இ மேல்முறையீடு செய்தால் அதற்கு தங்கள் தரப்பு கருத்தையும் கேட்ட பின்னரே உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்பதற்காக கேவியட் மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக வழக்கறிஞர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் , `` நீட் தேர்வு விவகாரத்தில் சி.பி.எஸ்.இ.யின் முடிவைப் பொறுத்தே தமிழக அரசின் அடுத்தகட்ட நகர்வு இருக்கும். நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்குச் சாதகமாகதான் அரசு செயல்படும்” என கூறியுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!