வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (11/07/2018)

கடைசி தொடர்பு:13:00 (11/07/2018)

``விவாதங்கள் விரைவில் வடிவம் பெறும்”- ராகுல் சந்திப்பு குறித்து பா.இரஞ்சித் ட்வீட்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்தது தொடர்பாக இயக்குநர் பா.இரஞ்சித் ட்வீட் செய்துள்ளார். 

இயக்குநர் பா இரஞ்சித்

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று இயக்குநர் பா.இரஞ்சித்தைச் சந்தித்ததாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த ட்விட்டர் பதிவில், ``நான் டெல்லியில் நேற்று மெட்ராஸ், கபாலி, காலா போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் பா.இரஞ்சித் மற்றும் நடிகர் கலையரசனை சந்தித்தேன். நாங்கள் அரசியல், படங்கள் மற்றும் சமூகப் பிரச்னை குறித்துப் பேசினோம். இந்தச் சந்திப்பு மகிழ்ச்சியாக இருந்தது. இது தொடரும் என நினைக்கிறேன்” எனப் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்தச் சந்திப்பு தொடர்பாக இயக்குநர் பா.இரஞ்சித்தும் ட்வீட் செய்துள்ளார். ராகுலின் ட்வீட்டை ரீ -ட்வீட் செய்துள்ள இரஞ்சித், “ராகுல் காந்தியுடனான சந்திப்பில் அரசியல் மற்றும் கலை குறித்து விவாதித்தோம். மேலும், சாதி மற்றும் மதப் பிரிவுகள் மதச்சார்பற்ற அரசியலமைப்புக்கு எவ்வாறு அச்சுறுத்தலாக உள்ளது என்பது குறித்தும் விவாதித்தோம். அந்த விவாதங்கள் விரைவில் ஒரு வடிவம் பெறும் என நம்புகிறேன். ஒரு தேசியத் தலைவர் அனைத்துக் கருத்தியல் மக்களிடமும் தொடர்பில் இருப்பது வரவேற்கத்தக்கது” எனப் பதிவிட்டுள்ளார். 

தமிழக அரசியல் களத்தில் ராகுல் மற்றும் பா.இரஞ்சித் ஆகியோரின் சந்திப்பு இன்றைய விவாதமாயிருக்கிறது.