வெளியிடப்பட்ட நேரம்: 14:02 (11/07/2018)

கடைசி தொடர்பு:14:55 (11/07/2018)

``கீழமை நீதிமன்றத்தை அணுக முடியாதா?”- பாரதிராஜாவுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

தினமும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பாரதிராஜா நீதிமன்றத்தை அணுக முடியாதா எனச் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

பாரதிராஜா

கடந்த மாதம் தனியார் தொலைக்காட்சி தொடர்பான பிரச்னைகளில் சிக்கிய இயக்குநர் அமீருக்கு ஆதரவாகப் பேசிய பாரதிராஜாவின் கருத்து அரசை மிரட்டும் வகையிலும், தேசத்துக்கு விரோதமாக இருப்பதாகவும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனிடையே, கடந்த ஏப்ரல் மாதம் 10-ம் தேதி நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்கள் சென்னை சேப்பாக்கத்தில் நடத்தப்பட்டன. இந்தப் போராட்டத்தின்போது காவல்துறையினரைத் தாக்கத் தூண்டியதாகக் கூறி, அவர் மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் தனக்கு முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இயக்குநர் பாரதிராஜா மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் தினமும் காலை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையோடு பாரதிராஜாவுக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால், அதை அவர் பின்பற்றவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மற்றொரு வழக்கில் முன் ஜாமீன் கோரி மீண்டும் இயக்குநர் பாரதிராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இன்று அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தினமும் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் பாரதிராஜா ஏன் கீழ் நீதிமன்றத்தை அணுகவில்லை? எனக் கேள்வி எழுப்பினர்.