வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (11/07/2018)

கடைசி தொடர்பு:13:42 (12/07/2018)

நீட் தேர்வில் அசத்திய துப்புரவுத் தொழிலாளி மகனுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் ‘சீட்’

நெல்லை மாநகராட்சியின் துப்புரவுத் தொழிலாளி மகன் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதால் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்ந்து படிக்க சீட் கிடைத்துள்ளது.   

துப்புரவுத் தொழிலாளி மகன்

நெல்லை பழைய பேட்டை பகுதியில் வசிப்பவர் பாஸ்கர். இவர் நெல்லை மாநகராட்சியில் துப்புரவுத் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். அவரின் மனைவி சிவசக்தி, அந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் முத்து பி.ஏ படித்துவிட்டு தனியார் ரத்தப் பரிசோதனை மையத்தில் வேலை செய்துவருகிறார்.

இளைய மகன் சுதாகர் கடந்த 2016-ம் ஆண்டு ப்ளஸ் டூ முடித்தார். தமிழ் வழியில் படித்த அவர் 1046 மதிப்பெண் எடுத்ததோடு, பொறியியல் கல்லூரியில் சேர திட்டமிட்டிருந்தார். கவுன்சலிங் செல்ல இருந்த நிலையில், மாணவன் சுதாகரின் தந்தை பாஸ்கருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதனால் அவரால் கவுன்சலிங் செல்ல முடியவில்லை. தந்தையின் உடல் நலம் சரியான பின்னர், ஓராண்டு வீணாவதாக வருந்திய அவர் மருத்துவ நீட் தேர்வுக்கான பயிற்சிக்குச் செல்ல முடிவெடுத்தார்.

மாணவனின் தந்தை

அதில் சேர ஒன்றரை லட்சம் ரூபாய் தேவைப்பட்ட நிலையில் சுதாகரின் தாய் சிவசக்தி தனது நகைகளை விற்று பணம் கட்ட சம்மதித்தார். அதன்படி நீட் கோச்சிங் சென்ற நிலையில் கடந்த ஆண்டு அவரால் 161 மதிப்பெண் மட்டுமே எடுக்க முடிந்தது. ஆனாலும் தன்னால் சாதிக்க முடியும் என அவர் உறுதியாக நம்பியதால் பெற்றோரிடம் மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்குமாறு கேட்டார். அதன்படி அவருக்கு பெற்றோரும் ஊக்கம் அளித்தார்கள். 

இந்த ஆண்டு நீட் தேர்வில் சுதாகர் ஆங்கில வழியில் தேர்வெழுதி 303 மதிப்பெண் பெற்றார். அவருக்கு நேர்காணலில் நெல்லை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர் தற்போது முதலாமாண்டுக் கட்டணமான ரூ.10,500 கட்டிய நிலையில், புத்தகங்கள், உடைகள், ஸ்டெதஸ்கோப் உள்ளிட்டவற்றை வாங்க முடியாத நிலையில் தவித்து வருகிறார். இது பற்றி மருத்துவ மாணவர் சுதாகர் கூறும்போது, ``என்னுடைய பெற்றோர் பள்ளிப் படிப்பைக்கூட முடிக்காதவர்கள். ஆனாலும் அவர்கள் எனக்கு மிகவும் உற்சாகம் கொடுத்தார்கள். பெற்றோர் கொடுத்த ஊக்கத்தால் நான் கடும் முயற்சி எடுத்துப் படித்தேன். அதன் காரணமாகவே எனது மருத்துவக் கனவு நிறைவேறியது. என் தந்தை இதய நோயால் பாதிக்கப்பட்டதால் மேற்படிப்பு வாய்ப்பு பறிபோன நிலையில், தற்போது மருத்துவக் கல்வி சாத்தியமாகி இருக்கிறது. அதனால் இதய சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவராக வேண்டும் என்பதே எனது விருப்பம். இதய சிகிச்சை உள்ளவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே எனது விருப்பம்’’ எனத் தெரிவித்தார். அவருக்கு பாரட்டுகள் குவிந்து வருகின்றன.