வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (11/07/2018)

கடைசி தொடர்பு:13:32 (12/07/2018)

`தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில், அடுத்த இரண்டு தினங்களுக்கு மிதமான  மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வானிலை ஆய்வு மையம்

சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, `தென்மேற்குப் பருவமழை கேரளா மற்றும் கர்நாடகாவில் வலுப்பெற்று வரும் நிலையில், வால்பாறை, தேனி, திண்டுக்கல், மேற்குத்தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. அதேபோல, தமிழகத்தின் மற்ற பகுதிகளில் வெப்பச்சலனத்தால் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது. இந்த நிலை அடுத்த இரண்டு தினங்களுக்கு நீடிக்கும்.

மழை

ஜூன் 1 முதல் ஜூலை 11 வரை பதிவான மழை அளவு 86 மி.மீ. இந்தக் காலகட்டத்தில் பெய்யவேண்டிய மழை அளவு 68 மி.மீ. இது, இயல்பைவிட 27 சதவிகிதம் அதிகம். தென் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசுவதால், மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்குச் செல்ல வேண்டும். கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லார் 17 செ.மீ, வால்பாறை 15 செ.மீ, வால்பாறை தாலுகா அலுவலகம் 13 செ.மீ,  நீலகிரி மாவட்டம் தேவாலா 11 செ.மீ, தேனி மாவட்டம் பெரியாறு அணை நீர்த்தேக்கப் பகுதி      7 செ.மீ மழை பதிவாகியுள்ளது' என்று கூறினார்.