`என்னைப் பெத்த அம்மாபோல இருக்கீங்க’ - மூதாட்டியிடம் கைவரிசை காட்டிய சென்டிமென்ட் திருடன் 

சென்னையில், மூதாட்டி ஒருவரின் கவனத்தைத் திசைதிருப்பி, 6 சவரன் நகைகளை வழிப்பறிசெய்த சென்டிமென்ட் திருடனை போலீஸார் தேடி வருகின்றனர். 

மூதாட்டியிடம் நகைகளைத் திருடிய திருடன்

சென்னை வன்னிய தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் எத்திராஜ். இவரின் மனைவி ஜானகி. 60 வயதான இவர், தேனாம்பேட்டை சீத்தம்மாள் காலனியில் வீட்டு வேலை செய்துவருகிறார். சம்பவத்தன்று, வழக்கம்போல அவர் காலையில் வேலைக்குச் சென்றார். சீத்தம்மாள் காலனி பகுதியில் நடந்துசென்றபோது அவ்வழியாக வந்தவர், ஜானகியிடம் பேசினார். அப்போது, `உங்களைப் பார்த்தால் என்னைப் பெத்த தாய்போல உள்ளது; என் அம்மா முகமும் உங்கள் முகமும் ஒரே சாயலில் இருக்கிறது' என்று அந்த நபர் கண்கலங்கினார். இதைக் கேட்டு நெகிழ்ந்துபோன ஜானகி, `நீ யாரப்பா' என அவரிடம் நலம் விசாரித்தார். அப்போது, ஜானகியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். உடனே ஜானகியும், `நல்லா இருப்பா' என்று கூறினார். தொடர்ந்து அந்த நபர், 'அம்மா நீங்கள் நகைகளையெல்லாம் வெளியில் தெரிகிற மாதிரி போட்டுக்கொண்டு போகாதீர்கள். நிறைய திருடர்கள் நடமாட்டம் உள்ள பகுதி இது. கழற்றிக்கொடுங்கள். நான் பத்திரமாகப் பேப்பரில் வைத்துத் தருகிறேன் 'என்று கூறியுள்ளார். அதை நம்பிய ஜானகி, நகைகளைக் கழற்றி அந்த நபரிடம் கொடுத்துள்ளார். பிறகு, பேப்பரில் நகைகளை வைத்துக் கொடுத்துவிட்டு அந்த நபர் சென்றுவிட்டார். வீட்டுக்குச் சென்ற ஜானகி, பேப்பரைப் பிரித்துப் பார்த்தார். அப்போது அதில் நகைகள் இல்லை. சிறிய கற்கள் இருந்தன. இதனால், ஜானகி கதறி அழுதார். 

இதுகுறித்து அவர் தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் 6 சவரன் கொள்ளைபோனதாகப் புகார் கொடுத்தார். போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளைப் போலீஸார் கைப்பற்றி ஆய்வு நடத்தியபோது, வைலட் நிற சட்டை அணிந்த நபர் ஜானகியிடம் நகையை அபேஸ் செய்யும் காட்சிகள் தெளிவாகப் பதிவாகியுள்ளன. அவனைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

சிசிடிவி கேமராவில் பதிவான நபர், சென்னை பாண்டிபஜார் உஸ்மான் ரோட்டில் பன்னீர்செல்வம் என்ற நபரிடம் போலீஸ்போல நடித்து 2 சவரன்  நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றதாக பாண்டிபஜார் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீஸ்போல நடித்தும், மூதாட்டியிடம் மகன்போல நடித்தும் நகைகளை வழிப்பறி செய்தவரைப் பிடிக்க தி.நகர் துணைக் கமிஷனர் அரவிந்தன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!