புதுச்சேரி, தமிழகத்தைக் கலக்கிய ஏ.டி.எம் கொள்ளையன் சென்னையில் கைது!

ஏ.டி.எம் கொள்ளைமூலம் புதுச்சேரி, தமிழகத்தைக் கலக்கிய முக்கியக் கொள்ளையன் சந்துருஜியை சென்னையில் கைதுசெய்தது போலீஸ்.

கைது

ஏ.டி.எம் இயந்திரங்களில் ஸ்கிம்மர் கருவிகளைப் பொருத்தி, அதன்மூலம் போலி ஏ.டி.எம் அட்டைகளைத் தயாரித்து, சுமார் 400 கோடி ரூபாய் வரை கொள்ளையடித்த கும்பலை கேரள மாநில போலீஸ் கொடுத்த தகவலின் அடிப்படையில், புதுச்சேரியில் வைத்து சுற்றி வளைத்தது, புதுச்சேரி சிபிசிஐடி போலீஸ். கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி நடந்த இந்த அதிரடி நடவடிக்கையில், அடுத்தடுத்து 11 பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களைத் தொடர்ந்து, என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் சத்தியா கைதுசெய்யப்பட்டுவிட, முக்கியக் கொள்ளையன் என்று போலீஸாரால் சொல்லப்பட்ட அ.தி.மு.க பிரமுகர் சந்துருஜி தொடர்ந்து தலைமறைவாகவே இருந்தார்.

ஏடிஎம்

இதையடுத்து, ”இந்தக் கொள்ளைகளுக்கு மூளையாக இருந்து செயல்பட்டது சந்துருஜிதான். 90 சிம் கார்டுகளைப் பயன்படுத்திவரும் அவர், அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றி தப்பித்துக்கொண்டிருக்கிறார். பெல்ஜியம், டென்மார்க், அயர்லாந்து உள்ளிட்ட சர்வதேசக் கும்பலுடன் அவருக்குத் தொடர்பு இருப்பதையும் கண்டுபிடித்திருக்கிறோம். அதனால், அவரை சல்லடைபோட்டு தேடிக் கொண்டிருக்கிறோம். இனி, அவர் தப்பிக்க வாய்ப்பே இல்லை” என்று சிபிசிஐடி போலீஸ் பில்ட்-அப் கொடுத்துக்கொண்டிருந்த அதே நேரத்தில், “என்மீது அரசியல் சதி நடக்கிறது. நான் குற்றமற்றவன் என்பதை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன்” என கூலாகப் பேசி தனது முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை சந்துருஜி வெளியிட, சூடுபிடித்தது வழக்கு. இதற்கிடையில், கோயம்புத்தூரைச் சேர்ந்த இருவரைக் கைதுசெய்த போலீஸ், இந்த வழக்கில் இவர்கள்தான் முக்கிய நபர்கள் என்று தெரிவித்தது.

ஆனால், முக்கிய நபரான சந்துருஜி தொடர்ந்து தலைமறைவாகவே இருந்தாலும், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் பல அரசியல் பிரமுகர்களுக்கும் இதில் தொடர்பிருப்பதால், வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்று பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் குரலெழுப்பிவந்தன. இந்நிலையில் கடந்த இரண்டரை மாதங்களாகத் தலைமறைவாக இருந்த சந்துருஜியை இன்று சென்னையில் அதிரடியாக வளைத்துக் கைது செய்திருக்கிறது போலீஸ். இன்று மாலையே இவரை புதுச்சேரிக்குக் கொண்டுவருகின்றனர். வழக்கின் முக்கிய நபரான இவரைக் கைது செய்துள்ளதால், இவ்வழக்கில் எவ்வளவு பணம் மோசடி செய்யப்பட்டது என்று தெரியவரும். கைதுசெய்யப்பட்டுள்ள சந்துருஜி, புதுச்சேரி அ.தி.மு.க-வின் நகர கமிட்டி செயற்குழு உறுப்பினராக இருந்தார். தேடப்படும் குற்றவாளியாக அவரை போலீஸ் அறிவித்ததால், அ.தி.மு.க-விலிருந்து சந்துருஜி நீக்கப்பட்டார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!