வெளியிடப்பட்ட நேரம்: 17:03 (11/07/2018)

கடைசி தொடர்பு:12:24 (12/07/2018)

பிச்சாவரத்தில் வனத்துறை கெடுபிடி... புலம்பும் சுற்றுலாப் பயணிகள்... உண்மை என்ன?

பிச்சாவரத்தில் வனத்துறை கெடுபிடி... புலம்பும் சுற்றுலாப் பயணிகள்... உண்மை என்ன?

 பிச்சாவரம் சதுப்புநிலக் காடுகளின் இடையே உள்ள கால்வாய்களின் வழியே இயக்கப்படும் படகு சவாரி மிகவும் பிரபலம். இப்பகுதியில் உள்ள இயற்கை எழிலைப் படகு சவாரி செய்தபடியே ரசிக்க பல்வேறு பகுதியிலிருந்து சுற்றுலாப் பயணிகள் இங்கு வருவதுண்டு. ஆனால், கடந்த சில மாதங்களாக இந்தப் படகு சவாரிக்கு வனத்துறையினர் அதிகக் கட்டுப்பாடுகள் விதித்துள்ளதால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள பிச்சாவரம் சிறந்த சுற்றுலா மையம் ஆகும். இங்கு 3000 ஏக்கர் பரப்பளவில் சதுப்புநிலக் காடுகள் அமைந்துள்ளன. இந்தியாவில் மேற்குவங்கம், ஆந்திரா, ஒடிசா மாநிலங்களிலும் தமிழகத்தில் பிச்சாவரத்தில் மட்டுமே இந்த அரிய வகை காடுகள் அமைந்துள்ளன. ஆங்கிலத்தில் மாங்குரோவ் காடுகள் என்று அழைக்கப்படும் இவை மருத்துவக் குணம் நிறைந்த சுரபுன்னை மரங்களால் நிறைந்தவை. கடலோரத்தில் உப்பனாற்றில் உள்ள இக்காடுகளில் 4400 கால்வாய்கள் உள்ளன. இந்த இடம் இயற்கை அழகு நிறைந்து காணப்படுவதால் சினிமா படப்பிடிப்புகள் கூட இங்கு நடைபெறும். துப்பறிவாளன் திரைப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் இங்கே எடுக்கப்பட்டவைதாம். அடிக்கடி இப்பகுதிக்கு வெளிநாட்டுப் பறவைகளும் வந்து செல்வதுண்டு. இத்தகைய சிறப்புகளுடைய இந்த வனப்பகுதி தமிழ்நாடு வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.

சிறந்த சுற்றுலா மையமாக விளங்கி வரும் இங்கு படகுகள் இயக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளுக்காகப் படகு சவாரி நடைபெற்று வருகின்றது. இந்தப் படகு சவாரியும் வனத்துறையிரின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. கடந்த பல வருடங்களாக நடைபெற்று வரும் இந்தப் படகு சவாரிக்குப் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மட்டுமல்லாமல் பல மாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனர். தினமும் காலையில் தொடங்கி மாலை 5 மணி வரை படகு சவாரி நடைபெற்று வந்தது. இதனால் தொலைவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளும் சதுப்புநிலக் காடுகளின் அழகை ரசித்து சென்றனர்.

பிச்சாவரம் சுற்றுலா

பிச்சாவரம் படங்கள்

ஆனால், கடந்த சில மாதங்களாக வனத்துறையினர் படகு சவாரி செய்வோர்க்கு அதிக கட்டுப்பாடுகள் விதித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அதிருப்தியடைந்துள்ளனர். இதனால், வனத்துறையினருக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. இதன் விளைவாக மாலை 5 மணி வரை நடைபெற்று வந்த படகு சவாரி 4 மணியுடன் நிறுத்தப்பட்டது. மேலும், இப்பகுதியில் உள்ள சதுப்புநிலக் காடுகள் அழிந்து வருகின்றன என்ற காரணத்தைக் கூறி இங்கு சில கால்வாய்களின் வழியே சவாரி செய்யச் சிவப்புக் கொடி கட்டி தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு சவாரிக்கு ஒரு மணி நேரம் மட்டுமே அவகாசம் தரப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுப்பாடுகளாலும், கெடு பிடிகளாலும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். இதனால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை குறைந்து படகு சவாரி கலையிழந்து வருகிறது. மேலும் ``இப்பகுதியில் உள்ள இறால் பண்ணையிலிருந்து வரும் கழிவு நீர் இங்குள்ள கால்வாய்களில் கலக்கப்படுவதாலேயே சதுப்புநிலக் காடுகள் அழிந்து வருகின்றன, இதனை வனத்துறையினர் கண்டுகொள்வதே இல்லை" என்றும் உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

 எனவே, இவற்றை எல்லாம் சரி செய்து சுற்றுலாப் பயணிகளுக்கு உள்ள விதிமுறைகளைக் குறைத்து படகு சவாரி செய்ய அனுமதிக்க வேண்டும். மேலும் சவாரி செய்யும் நேரத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பதே சுற்றுலாப் பயணிகளின் வேண்டுகோளாக உள்ளது.


டிரெண்டிங் @ விகடன்