வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (11/07/2018)

கடைசி தொடர்பு:13:25 (12/07/2018)

`பணத்தை வாங்கிக் தருகிறோம்; துன்புறுத்தாதீர்கள்' - தனியார் நிறுவன முகவர்கள் கண்ணீர்!

"யாருடைய பணத்தையும் அபகரிக்கவோ, ஏமாற்றவதோ எங்களுக்கு நோக்கம் அல்ல. நாங்கள் வாங்கிய பணத்தைக் கொடுத்துவிடுகிறோம். எங்களைத் துன்புறுத்தாதீர்கள்" எனத் தனியார் நிறுவன முகவர்கள் கண்ணீர்மல்க கலெக்டரிடம் மனுக் கொடுத்துள்ளனர்.

                                  

 

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த டிஸ்க் அசட்ஸ் லிட் இந்தியா நிறுவனம்மீது வாடிக்கையாளர்கள் மற்றும் முகவர்கள் 200-க்கும் மேற்பட்டோர், பெரம்பலூர் கலெக்டர் (பொறுப்பு) அழகிரிசாமியிடம் புகார் மனு அளித்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், "மதுரையை தலைமையிடமாகக்கொண்டு செயல்பட்ட டிஸ்க் அசட்ஸ் லிட்  நிறுவனத்தில் 2006-ம் ஆண்டு முதல் 200-க்கும் மேற்பட்டோர் முகவர்களாகப் பணிபுரிந்தோம். மாதத் தவணையாக ரூ.100 முதல் ரூ.10,000 வரை பொதுமக்களிடம் வசூலித்து, 5 ஆண்டுகள் முடிவில் நிலமாகவோ, ரொக்கமாகவோ வாங்கிக்கொள்ளலாம் எனும் திட்டத்தில் வசூலித்து ரசீது வழங்கினோம். தொடக்கத்தில், முறையாக முதிர்வுத் தொகைகளை வழங்கியதால் கோடிக்கணக்கில் பணம் வசூலித்துக் கொடுத்தோம். 

                              

இந்நிலையில், சில நடவடிக்கையால் 2015 ஆகஸ்ட் முதல் நிறுவனத்தின் சொத்துகள் அனைத்தும் முடக்கப்பட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுவருகிறது. வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர்களுக்குப் பணம் கொடுப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி பால்வசந்தகுமார் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு, வாடிக்கையாளரிடம் ஆவணங்களின் நகலைப் பெற்று, பணத்தைத் திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. வழக்கு நிலுவையில் உள்ள சூழலில், பணம் வசூலித்துக்கொடுத்த காரணத்தால், முகவர்கள் அனைவரும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிவருகிறோம்.

                               

சில முகவர்கள் தற்கொலைசெய்துகொண்டனர். எனவே, இப்பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து தொகையை திரும்பப் பெற்றுத்தரவும், முகவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இதை, ஆட்சியரிடம் புகாராகக் கொடுப்பதால் எங்களுக்கு என்னவேண்டுமானாலும் நடக்கலாம். எது நடந்தாலும் பரவாயில்லை என்று புகார் கொடுக்க வந்திருக்கிறோம். எங்களுடைய பணத்தை மீட்டுத் தாருங்கள். இல்லையேல், நாங்கள் குடும்பத்தோடு சாகவேண்டியதுதான். நாங்கள் யாருடைய பணத்தையும் அபகரிக்கவோ, ஏமாற்றவதோ எங்களுக்கு நோக்கம் அல்ல. நாங்கள் வாங்கிய பணத்தைக் கொடுத்துவிடுகிறோம் எங்களைத் துன்புறுத்தாதீர்கள்" என்று வேதனை தெரிவித்தனர்.