சினிமாவைப் போல திருடனை விரட்டிப் பிடித்த காவலர்! சென்ட்ரலில் நடந்த ரிலே

விருது பெறும் காவலர்

சென்னை சென்ட்ரலில் செல்போன் திருடனை சினிமாவில் வரும் காட்சிபோல விரட்டிப் பிடித்த காவலர் அகமது உசேனை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டினார். 

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகா, தென்னாவரம் கிராமம் மேட்டு தெருஐவைச் சேர்ந்தவர் மணி. இவர், நேற்று இரவு சென்னை மூலக்கடையில் உள்ள உறவினர் வீட்டுக்குச் செல்ல சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தார். அப்போது, வாலிபர் ஒருவர் மணியிடமிருந்த செல்போனை பறித்துக்கொண்டு ஓடினார். திருடன் திருடன் என்று மணி சத்தமிட்டார். அப்போது பூக்கடை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரவி, அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். மணியிடம் விசாரித்தபோது செல்போனைத் திருடிக்கொண்டு ஓடிய தகவல் தெரியவந்தது.

உடனே செல்போன் திருடனை இன்ஸ்பெக்டர் ரவி, காவலர் அகமது உசேன் ஆகியோர் விரட்டிச் சென்றனர். திருடன் சென்ட்ரல் சிக்னலைக் கடந்து பூந்தமல்லி நெடுஞ்சாலை, பூங்கா ரயில் நிலையம் அருகே வேகமாக ஓடிக்கொண்டிருந்தார். அவரை விடாமல் துரத்தினார் அகமது உசேன். அப்போது, சாலையில் உள்ள தடுப்பைத் தாண்டிக் குதித்த திருடன், அந்த வழியாகச் சென்ற அரசுப் பேருந்தில் ஏற முயன்றார். அதைப் பார்த்த காவலர் அகமது உசேனும் தடுப்பைத் தாண்டிக் குதித்தார். பஸ்ஸில் இருவரும் ஏறினர். உடனே பஸ்ஸைவிட்டு திருடன் கீழே இறங்கி மீண்டும் சாலையில் ஓடத் தொடங்கினார். இதனால், காவலரும் பஸ்ஸிலிருந்து இறங்கி திருடனை விரட்டிப் பிடித்தார். சினிமா படக் காட்சிபோல இந்தச் சம்பவம் நிகழ்ந்ததைப் பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர்.

பூக்கடை போலீஸ் நிலையத்துக்கு திருடன் அழைத்துச் செல்லப்பட்டான். அங்கு விசாரித்தபோது தருமபுரி மாவட்டம், பெண்ணாகரத்தைச் சேர்ந்த மஞ்சு என்று தெரியவந்தது. மஞ்சுவின் உறவினர் ஒருவர் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். அவரைக் கவனித்துக்கொள்ள மஞ்சு சென்னை வந்துள்ளார். இந்தச் சமயத்தில்தான் மணியின் செல்போனை மஞ்சு திருடிவிட்டு ஓடியுள்ளார் என்று விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து மஞ்சுவிடமிருந்து செல்போனை மீட்டு மணியிடம் போலீஸார் ஒப்படைத்தனர். செல்போனைத் திருடிய மஞ்சுவை போலீஸார் கைது செய்தனர். 

இந்தத் தகவல் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனுக்குத் தெரிந்ததும் காவலர் அகமது உசேனை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!