வெளியிடப்பட்ட நேரம்: 18:15 (11/07/2018)

கடைசி தொடர்பு:13:18 (12/07/2018)

ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஸ்ரீ ரங்க நாராயண ஜீயர் சுவாமிகள் காலமானார்!

திருச்சி ஸ்ரீரங்கம் திருக்கோயிலின் ஐம்பதாவது ஸ்ரீமத் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் சுவாமிகள், சற்று முன் காலமானார்.

விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் வட்டம் நயினார் பாளையம் கிராமத்தில், பால கிருஷ்ணமாச்சாரி - சேஷலட்சுமி தம்பதியருக்கு மகனாகக் கடந்த 03.12.1929-ம் ஆண்டு பிறந்த  இவரின் பெயர், ஸ்ரீ வரதாச்சாரியார். அதன்பிறகு, திருச்சி திருவானைக்காவலில் உள்ள ஸ்ரீ சங்கரமடத்தில் ரிக் வேதமும், சிதம்பரத்தில் வட மொழியும் கற்றுத்  தேர்ந்தவர்,  வேதம் பயின்றதுடன், ஶ்ரீரங்கம் ரங்கநாதரின்பால் மிகுந்த ஈடுபாட்டுடன் விளங்கினார்.  1959–ம் ஆண்டு முதல் கோயம்புத்தூர் அர்ச்சகராக கெரடி கோயில் எனப்படும் ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் அர்ச்சகராக கைங்கர்யம் செய்ய ஆரம்பித்தவர்,  அவரது 60-வது வயது முடிந்தவுடன் திருவரங்கம் வந்து, உடையவர் சன்னதியில் காஷாயம் ஏற்று, ‘ஸ்ரீரங்க நாராயண ஜீயர்’  பட்டம் ஏற்று, ஸ்ரீரங்கம் ஸ்ரீ ராமானுஜ மடத்தின் 50-வது ஜீயராகத் திருமடத்தை அலங்கரித்தார்.

அதையடுத்து, ஸ்ரீ ரங்கநாதரின் திருவருட்பணியில்  தன்னை முழுமையாக ஆட்படுத்திக்கொண்ட ஜீயர் சுவாமிகள், திருக்கோயிலில் அரங்கன் சேவையில் புணுகுக்காப்பு சாற்றும்போது விசிறி வீசுதல் எனப்படும் திருவாலவட்டம் கைங்கர்யமும், திருவாராதனமும், கோஷ்டிகள் கைங்கர்யம் போன்ற பல கைங்கர்யங்களைச் செய்துவந்தார்.

அரங்கனின் சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட ஜீயர் சுவாமிகள், ஸ்ரீ ராமானுசரின் திருவுள்ளப்படி மடத்தைச் சிறப்புற பொழிவுபெறச் செய்துள்ளார். மடத்துக்கு வருகை தரும் பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றியும், அரங்கனின் சேவைகளில் அடியார்களை ஈடுபத்தியும், அனைவரின் அன்புக்கும் பக்திக்கும் உரியவராக விளங்கி, ஸ்ரீ வைணவத்திற்குப் பெருந்தொண்டாற்றிய ஸ்ரீரங்க நாராயண ஜீயர் சுவாமிகளுக்கு வயது 90ஆகும்.

  உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி சற்று முன் காலமானார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க