`துப்பாக்கிச்சூட்டின்போது மாவட்ட ஆட்சியர் எங்கே சென்றார்?' - அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தன்று மாவட்ட ஆட்சியர் எங்கே சென்றார் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

துப்பாக்கிச் சூடு

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்திய மக்கள்மீது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் இறந்தனர். இதுகுறித்து மதுரை உயர் நீதிமன்றத்தில் 15-க்கும் மேற்பட்ட பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இதில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, ஸ்டெர்லைட் போராட்டம், போராட்டத்திலும் துப்பாக்கிச்சூட்டிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு அதிகப்படுத்தி வழங்க வேண்டும், துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சி.பி.ஐ.விசாரிக்க வேண்டும், துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர், விசாரணை என்ற பெயரில் பொதுமக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள், சட்ட விரோதமாகப் போலீஸார் காவலில் வைத்து உள்ளவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், துப்பாக்கிச் சூட்டில் சம்பந்தப்பட்டுள்ள தமிழக உளவுத்துறை செயலர், தலைமைச் செயலாளர், காவல்துறை டி.ஜி.பி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிய வேண்டும், துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட பொழுது காவல்துறையினர் உரிய விதிமுறைகளைப் பின்பற்றவில்லை ஆகிய மனுக்கள் இன்று ஒன்றாக விசாரனைக்கு வந்தது. இவற்றை நீதிபதிகள் சி.டி.செல்வம் - ஏ.எம்.பஷீர் அகமது ஆகியோர் விசாரித்தனர். 

அப்போது பேசிய நீதிபதிகள், ``போராட்டத்தில் போலீஸார் என்ன வகையான துப்பாக்கிகள் பயன்படுத்தினர். மே 22 போராட்டம், துப்பாக்கிச் சூடு நடந்த அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் எங்கு இருந்தார்" எனச் சரமாரியாகக் கேள்வி எழுப்பினர். மேலும் தூத்துகுடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமைதியாக நடைபெற்ற 99 நாள் போராட்டம் குறித்த முழுமையான வீடியோ மற்றும் 99 நாள் குறித்த உளவுத்துறை அறிக்கை ஆகியவற்றை 18-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்குகளை ஜூலை 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!