வெளியிடப்பட்ட நேரம்: 19:49 (11/07/2018)

கடைசி தொடர்பு:13:13 (12/07/2018)

அனுமதியின்றி செயல்பட்ட பாரை துவம்சம் செய்த அதிகாரிகள்! விருத்தாசலத்தில் நடந்த நிஜம்

விருத்தாசலம் பஸ் நிலையம் அருகில் ஜங்ஷன் ரோடு, கடலூர் ரோடு, ஸ்டேட் பேங்க் அருகில், புற வழிச் சாலை என 9 இடங்களில் அரசு டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் அரசு அனுமதியின்றி பார்கள் இயங்கி வந்தன.

விருத்தாசலம்

விருத்தாசலம்  பேருந்து நிலையம் , ஜங்ஷன் ரோடு, கடலூர் ரோடு, ஸ்டேட் பேங்க், புற வழிச் சாலை என 9 இடங்களில் அரசு டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் அனுமதியின்றி பார்கள் இயங்கி வந்தன. இது குறித்து இப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் திருச்சி முதுநிலை மண்டல மேலாளர் வேலுசாமி, கடலூர் மாவட்ட மேலாளர் சக்தி பிரேம் சந்தர், உதவி மேலாளர் ஆனந்தன் உட்பட 10 பேர் கொண்ட குழுவினர் இன்று விருத்தாசலம் நகர் பகுதி முழுவதும் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 9 இடங்களில் உரிய அனுமதியின்றி பார்கள் இயங்கி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து இந்தக் குழுவினர் பார் இயங்கி வந்த தற்காலிக செட்களைப் பிரித்தனர், அங்கு அமைக்கப்பட்டிருந்த சிமென்டால் ஆன  பெஞ்ச்களை அடித்து உடைத்தனர். அங்கிருந்த அடுப்பு, பாத்திரங்கள் போன்ற பொருள்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களைப் பார்த்ததும் பார் நடத்தியவர்கள் ஓடிவிட்டனர். அங்கிருந்த இருவரை மட்டும் பிடித்து விருத்தாசலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விருத்தாசலத்தில் அனுமதியின்றி நடந்து வந்த பார்களை அதிகாரிகளே உடைத்து, செட்களை அப்புறப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.