வெளியிடப்பட்ட நேரம்: 21:06 (11/07/2018)

கடைசி தொடர்பு:13:11 (12/07/2018)

`ஸ்டெர்லைட் விவகாரத்தில் மத்திய அரசின் நிலை வேறு' - பொன்.ராதாகிருஷ்ணன்!

'தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக,  மத்திய அரசு தற்போது எந்த ஒரு நிலைப்பாடும் எடுக்க முடியாது' என மத்திய இணைஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

பொன் ராதாகிருஷ்ணன்

துாத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளம் கிராமத்தில், சுதந்திரப்போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின்  பிறந்தநாள் விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள கட்டாலங்குளத்திற்கு வந்த மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், அழகுமுத்துக்கோனின்  திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைசெலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ராஜீவ் காந்தி கொலை வழக்கு என்பது மிக முக்கியமான ஒரு வழக்காகும்.  இத்தனை ஆண்டுகளாக அந்த வழக்கு எவ்வாறு நடத்தப்பட்டது என்பதற்கான விவரங்கள் இருக்கின்றன. இவ்வழக்கு,  குடியரசுத் தலைவரின் பார்வைக்குச் சென்று திரும்பியிருக்கிறது. இதில், எந்த முறையான நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை மத்திய அரசு எடுக்கும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில் மத்திய அரசின் நிலை என்பது வேறு. அதை இப்போது எடுக்க முடியாது. மாநில அரசு என்ன முடிவெடுக்கிறதோ, அதைச் சார்ந்தே மத்திய அரசின் முடிவு அமையும். வீரன்  அழகுமுத்துக்கோன் ஒரு சாதியின் தலைவர் அல்ல. இந்திய தேசத்தின் விடுதலைப்போராட்டத் தலைவர் " என்றார். 

கீதாஜீவன்

அழகுமுத்துக்கோனின் சிலைக்கு மாலை அணிவித்த தூத்துக்குடி தொகுதி தி.மு.க.  எம்.எல்.ஏ., கீதாஜீவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஊழல் பற்றி அமித்ஷா பேசியது ஒன்றும் வியப்பில்லை, தமிழகத்தில் நிலை என்னவென்று எல்லாருக்கும் தெரியும், ஸ்டெர்லைட் ஆலை மக்களின் உணர்வுகளை ஏற்று மூடப்பட்டுள்ளது; அது தொடர வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேண்டும் என்று கூறுபவர்களின் பின்னணி குறித்தும், உண்மை நிலையை அறிய வேண்டும்" என்று தெரிவித்தார்.

அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தென்மண்டல ஐ.ஜி.,சண்முகராஜேஸ்வரன் மேற்பார்வையில், டி.ஐ.ஜி.,கபில்சரட்கர் தலைமையில்  ஒரு எஸ்.பி., 12 டி.எஸ்.பி மற்றும் 650 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க