வெளியிடப்பட்ட நேரம்: 21:49 (11/07/2018)

கடைசி தொடர்பு:13:08 (12/07/2018)

தனுஷ்கோடியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்ஃபின்!

தனுஷ்கோடி அருகே உள்ள ஒத்தப்பட்டி கடற்கரைப் பகுதியில்,  45 கிலோ எடைகொண்ட கூன் முதுகு டால்ஃபின், இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.

டால்பின் 

மன்னார் வளைகுடா கடல் பகுதியில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் வாழ்ந்துவருகின்றன. இவற்றில், பல இனங்கள் அழியும் நிலையில் உள்ள உயிரினங்களாக இருந்துவருகின்றன. இதையடுத்து, 57 வகையான கடல் வாழ் உயிரினங்களை மீனவர்கள் பிடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஒரு வகையைச் சேர்ந்ததுதான் இது. கூன் முதுகு டால்ஃபின்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அதிக அளவில் உள்ளன.

இந்நிலையில், தனுஷ்கோடி அருகே உள்ள பாரடி பகுதியில் நேற்று உயிருக்குப் போராடிய நிலையில் கூன் முதுகு டால்ஃபின் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இதைக் கண்ட அப்பகுதி மீனவர்கள், இதுகுறித்து மண்டபம் கடல்வாழ் உயிரின பாதுகாப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அவர்கள், மீனவர்களின் உதவியுடன் கரை ஒதுங்கிய டால்ஃபினை மீண்டும் கடலில் விட்டனர். ஆனால் அது, தொடர்ந்து நீந்த முடியாத நிலையில் இன்று ஒத்தப்பட்டி பகுதியில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியது. 45 கிலோ எடைகொண்ட இந்த பெண் டால்ஃபின், காற்றின் வேகத்தினால் பாறையில் மோதியதால் இடது கண் அருகே காயம் ஏற்பட்டு, தொடர்ந்து நீந்த முடியாததால் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிகிறது. இதையடுத்து அங்கு வந்த மண்டபம் வன உயிரின பாதுகாப்பு வனவர் சதீஷ் தலைமையிலான ஊழியர்கள், கரை ஒதுங்கிய டால்ஃபினை உடல் கூறாய்வுக்குப் பின் கடற்கரைப் பகுதியில் புதைத்தனர்.