மருதூர் அணைப் பகுதியில் சிக்கிய 200 மாடுகள் - மீட்புப் பணிகள் தீவிரம்!

தூத்துக்குடி மாவட்ட பாசனத்துக்காகத் தாமிரபரணியிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதில், மருதூர் அணைப் பகுதியில் மேய்ச்சலில் ஈடுபட்ட 200 மாடுகள் சிக்கின. அதில் 100 மாடுகள் மீட்கப்பட்டன. மீதமுள்ள மாடுகளைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 

மருதூர் அணை தாமிரபரணி நதியின் 7-வது அணைக்கட்டாகும். இந்த அணைக்கட்டு அமலை செடிகளால் நிறைந்து காணப்படுகிறது. விவசாயப் பாசனத்துக்காகத் தற்போது தாமிரபரணியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இத்தண்ணீரால் மருதூர் அணை நிரம்பியது. இங்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, மருதூர் மேலக்கால் மற்றும் கீழக்கால் மூலம் பாசனத்துக்காகத் தண்ணீரை திறந்து விட வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவித்திருந்தனர். இந்நிலையில் கலியாவூர் அருகில் உள்ள உழக்குடியைச் சேர்ந்த விவசாயிகளான வடிவேல் செல்லையா, அர்ச்சுணன் சுப்பையா, சிதம்பரம், பண்டாரம், சுடலை சிவா ஆகிய விவசாயிகளுக்குச் சொந்தமான 200-க்கும் மேற்பட்ட மாடுகள் மேய்ச்சலுக்காக அணைக்கட்டுப் பகுதிக்குள் சென்றன.

அப்போது தண்ணீர் வரத்து அதிகமானதால் மாடுகள் சிக்கிக்கொண்டன. அப்பகுதி மக்கள் மாடுகளை மீட்க முயற்சி செய்தனர். தொடர்ந்து, சிப்காட் தீயணைப்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அணையிலிருந்து கீழக்காலில் 250 கன அடி, மேலக்காலில் 150 கனஅடி மற்றும்  ஸ்ரீவைகுண்டம் அணைக்கு 500 கனஅடி தண்ணீர் வீதம் திறந்துவிடப்பட்டது. இருப்பினும், அணைப்பகுதியில் அமலைச் செடிகள் அதிகமாக இருந்ததால் மீட்புப் பணி தாமதமானது. ஊர் மக்கள் உதவியோடு தீயணைப்புப் படையினர் சுமார் 98 மாடுகளை உயிருடன் மீட்டனர். இதில் 1 காளை மாடு இறந்த நிலையில் மீட்கப்பட்டது. தொடர்ந்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகளிடம் பேசினோம், “இந்த மருதூர் அணையில் மணல் அள்ளப்பட்டுவிட்டதால், பல இடங்களில்  மிக ஆழமான குழிகள் உள்ளன. அமலைச் செடிகளும் அடர்ந்துள்ளது. இவற்றில்தான் மாடுகள் சிக்கிக்கொண்டன. ஆங்காங்கே சில இடங்களில் தீவுபோல  உள்ள இடங்களில் மாடுகள்  தப்பி நிற்கலாம். இந்த அணை பொதுப் பணித்துறையின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. அமலைச் செடிகளை அகற்றிட வேண்டும் எனப் பலமுறை கூறியும், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாடுகள் சிக்கிக் கொண்ட தகவல் தெரிந்த பிறகும் 5 மணி நேரம் வரை பொதுப் பணித்துறை அதிகாரிகள் யாரும் வரவில்லை.

மாடுகளை மீட்கும் பணி தடைப்பட்டதால்தான் ஜே.சி.பி இயந்திரம் மூலமாக அமலைச் செடிகள் அகற்றும் பணி நடந்தது. ஆனால், அணைப் பகுதிக்குள் இறங்கி அமலைச் செடிகளை அகற்றினால் மட்டுமே முழுமையாக மாடுகளை மீட்க முடியும். எனவே, பொக்லைன் இயந்திரம் மூலம் அமலைச் செடி அகற்றித் தர வேண்டும். அவரவர் மந்தைக்குள் மாடுகள் அடைந்தால் மட்டுமே எத்தனை மாடுகள் மீட்கப்பட்டுள்ளன. எத்தனை மாடுகள் காணவில்லை என்பது தெரிய வரும்” என்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!