ராமேஸ்வரம் நகராட்சி ஆணையருக்கு பிடிவாரண்ட் - சொத்து வழக்கில் நீதிமன்றம் உத்தரவு! | Warrnt issue to Rameshwaram municipal commissioner who did not appear in the property case

வெளியிடப்பட்ட நேரம்: 00:40 (12/07/2018)

கடைசி தொடர்பு:13:07 (12/07/2018)

ராமேஸ்வரம் நகராட்சி ஆணையருக்கு பிடிவாரண்ட் - சொத்து வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

சொத்து பிரச்னை வழக்கில் ஆஜராகாத ராமேஸ்வரம் நகராட்சி ஆணையாளருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து ராமநாதபுரம் சார்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவுப் பிறப்பித்துள்ளார்.

வீரமுத்துக்குமார்

ராமேஸ்வரம் ரயில்வே பீடர் ரோட்டில் வசித்து வரும் பொன்னையா மனைவி காந்திமதியம்மாள் (47). இவருக்கும் இவரின் தம்பியான ராமேஸ்வரம் பாரதிநகரில் வசித்து வரும் குமார் மகன் மோகன் (45) என்பவருக்கும் சொத்துப் பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்தச் சொத்து தனக்குரியது எனவும் இதை மோகனும் அவரின் தரப்பைச் சேர்ந்த 9 பேரும் சேர்ந்து அபகரிக்கப் பார்ப்பதாகவும் காந்திமதியம்மாள் ராமநாதபுரம் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கில் காந்திமதியம்மாள் தனது சொத்து தொடர்பாக ராமேஸ்வரம் நகராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் முறையாக வரி செலுத்தி வருவதாகவும் அந்த வரி தொடர்பாக நகராட்சி ஆணையாளரை விசாரித்தால் உண்மை தெரியவரும் எனவும் தெரிவித்திருந்தார். 

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த 3 மாதங்களில் 3 முறை வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு நகராட்சி ஆணையாளருக்கு அழைப்பாணை அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதன் தொடர்ச்சியாகக் காந்திமதியம்மாள் கேட்டுக்கொண்டபடி தண்டோரா மூலம் நகராட்சி ஆணையாளருக்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் நீதிமன்ற அழைப்பாணையை ஆணையாளர் அலுவலக கதவில் நீதிமன்ற ஊழியர்கள் ஒட்டியும் வந்துள்ளனர். இந்த அறிவிப்புக்குப் பின்னரும் ராமேஸ்வரம் நகராட்சி ஆணையாளரான வீரமுத்துக்குமார் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதற்கிடையே தொடர்ந்து 4 முறை நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியும் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து ராமநாதபுரம் சார்பு நீதிமன்ற நீதிபதி எம்.பிரீத்தா உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் இம்மாதம் 25-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.