வெளியிடப்பட்ட நேரம்: 20:41 (11/07/2018)

கடைசி தொடர்பு:20:41 (11/07/2018)

அலட்சிய சென்னைப் பல்கலைக்கழகம்... வீணாகும் கோடிகள்!

இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகையில் 22.79 கோடி ரூபாய் செலவழித்த நிலையில், மீதித்தொகையை பல்கலைக்கழகம் செலுத்தாமல் இருந்ததால், மூன்று ஆண்டுகளாக இந்தக் கட்டடம் முழுமையடையாமல் இருக்கிறது.

அலட்சிய சென்னைப் பல்கலைக்கழகம்... வீணாகும் கோடிகள்!

மிழக அரசின் நிதி நிலையே மோசமாக இருந்துவரும் நிலையில், பலகோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பல்கலைக்கழகக் கட்டடம் பாதியில் நிற்கும் அவலத்தைத் தோலுரித்துக் காட்டியுள்ளது மத்திய தணிக்கைத் துறையின் அறிக்கை. 

மத்திய தணிக்கைத் துறையின் ஆய்வறிக்கையில் 'அடுக்குமாடி கட்டட கட்டுமானத்தில் பலனற்ற செலவினம்' என்ற தலைப்பில் சென்னை பல்கலைக்கழத்திற்காக கட்டப்பட்ட நான்கு தளங்களை உள்ளடக்கிய கட்டடம் ஒன்று, பல ஆண்டுகளாக கட்டிமுடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருப்பது சுட்டிகாட்டப்பட்டுள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் தரமணி வளாகத்தில் அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிக்காக கலையரங்கம், ஆய்வரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட வசதிகளுடன் அடுக்குமாடிக் கட்டடம் கட்ட பல்கலைக்கழகம் முடிவு செய்தது. இந்தத் திட்டத்தைப் பல்கலைக்கழகம் சுயமதிப்பீட்டுத் திட்டமாக செயல்படுத்த முடிவு செய்து 2012-ம் ஆண்டு இதற்கான ஒப்பந்தமும் இறுதிசெய்யப்பட்டது. மொத்தம் 35.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டடம் மற்றும் இதர பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. 2012 டிசம்பரில் இந்தக் கட்டடத்திற்கான பணிகள் தொடங்கின. 2013-ம் ஆண்டு ஜனவரியில் ஒப்பந்ததாரர் கட்டடத்தின் செலவினத்தின் முதல் பட்டியலை சமர்ப்பித்தார். பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுவின் வழிகாட்டுதல்படி, பட்டியல் அளித்த ஐந்து நாட்களுக்குள் பணம் வழங்க வேண்டும். ஆனால், ஒப்பந்தாரர் பட்டியல் சமர்ப்பித்தப் பிறகு, பணம் வழங்குவதற்கு 50 நாட்கள் முதல் 907 நாட்கள் வரை காலம் தாழ்த்தியுள்ளார்கள். கட்டடப் பணிகளுக்கான பணம் வழங்குவதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வந்ததால், 68 சதவிகித அளவிலான பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு ஒப்பந்தாரர் பணிகளை நிறுத்தினார். அதாவது, இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகையில் 22.79 கோடி ரூபாய் செலவழித்த நிலையில், மீதித்தொகையை பல்கலைக்கழகம் செலுத்தாமல் இருந்ததால், மூன்று ஆண்டுகளாக இந்தக் கட்டடம் முழுமையடையாமல் இருக்கிறது. இந்தக் கட்டடத்திற்கு தேவையான எஞ்சியுள்ள நிதியை மானியமாக வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு பல்கலைக்கழகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அரசுத் தரப்பில் இதற்கு ஒப்புதல் தரவில்லை. இதற்கு காரணமாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

சென்னைப் பல்கலைக்கழகம், முறைக்கேடு

"பல்கலைக்கழகத்தின் திட்டம், நிதித் தேவைக்கான முதல்நிலை மதிப்பீட்டைக்கூட உள்ளடக்கி இருக்கவில்லை. ஆட்சிமன்றக் குழுவும் நிதி வழங்கப்படும் முறையை ஆராயாமல் இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல், சென்னைப் பல்கலைக்கழகத்தில் செயல்படும் நிதிக்குழு, நிதி மதிப்பீடுகளை ஆராய்ந்து பார்க்கும் அதிகாரம் கொண்டது. ஆனால் 35.90 கோடி ரூபாயில் ஒரு கட்டடம் கட்டுவதற்கான செலவு, பல்கலைக்கழகத்திற்கு பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்தும் என்ற போதிலும், அதைப்பற்றி ஆராய நிதிக்குழுவின் அனுமதிக்கே இந்தத் திட்டத்தை அனுப்பவில்லை. கட்டடங்கள், கட்டுமானம் போன்றவை பல்கலைக்கழகத்தின் மூலதனக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அதேநேரம், தமிழக அரசு, பல்கலைக்கழக மானியக்குழு ஆகியவற்றிடம் இருந்து குறிப்பிட்ட பணிகளுக்கான மானியத் தொகையை மூலதனச் செலவிற்கு மாற்றியுள்ளது. அதாவது, மேற்கண்ட திட்டத்திற்கு பணம் வழங்கும் அளவிற்கு பல்கலைக்கழகத்தில் நிதி இல்லை என்பதால், பல்வேறு நெருக்கடிகளைப் பல்கலைக்கழகம் சந்தித்துள்ளது. இதனால், ஊழியர்கள் மற்றும் பேராசிரியர்களின் ஒய்வூதியத்திற்கும், எதிர்காலக் கடமைகளுக்காகவும் வைக்கப்பட்டிருந்த தொகையில் இருந்து 33.91 கோடி ரூபாய் திட்டத்திற்கு பல்கலைக்கழகம் பயன்படுத்தியுள்ளது. இதனால் ஓய்வூதிய நிதியில் 190 கோடி ரூபாய் அளவிற்கு  பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தக் குளறுபடியால் இந்தக் கட்டடம் பாதியில் நிற்பது குறித்து பல்கலைக்கழகத்திடம் ஆய்வுக் குழு விளக்கம் கேட்டுள்ளது. அதற்குப் பல்கலைக்கழகத் தரப்பு அளித்த பதிலில், 'கடந்த 15 மாதங்களாக துணைவேந்தர் பதவி நிரப்பப்படாமல் இருந்ததால் இந்தப் பிரச்னைக்கு முடிவு ஏற்படவில்லை. கடந்த ஆண்டு மே மாதம்தான் துணைவேந்தர் நியமிக்கப்பட்டதால், இந்தப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும்' என்று தெரிவிக்கிறார்கள். 

ஆனால், சென்னைப் பல்கலைக்கழகத்தின் சட்டவிதிகளின்படி, பல்கலைக்கழகச் சொத்துகள் மற்றும் நிதிகளை கையாள்வதற்கு ஆட்சிமன்றக் குழுவிற்கு முழு அதிகாரம் இருக்கிறது. ஆனால், ஆட்சி மன்றக் குழு இந்த விஷயத்தில் சரிவர செயல்படாமல் இருந்து விட்டு தற்போது துணைவேந்தர் இல்லை என்று காரணம் சொல்வது சரியல்ல!" என்று சாட்டையடி கொடுத்துள்ளது தணிக்கை துறையின் ஆய்வறிக்கை.

"பல்கலைக்கழகத்தின் நிதி ஆதாரங்களைக் கருத்தில் கொள்ளாமல் பல்கலைக்கழகம் எடுத்த முடிவினால் 22.79 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளது. மேலும் பணியாளர்களின் ஓய்வூதிய வைப்பு நிதியில் கைவைத்திருப்பதால், எதிர்காலத்தில் அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய பணிக்கொடையிலும் சிக்கலை ஏற்படுத்தும்" என்கிறார்கள் அவர்கள்.


டிரெண்டிங் @ விகடன்