`தமிழகத்தில் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திப்போம்’ - பா.ஜ.க பொதுச் செயலாளர் தகவல்! | BJP will alaince with other parties to face Parliament election

வெளியிடப்பட்ட நேரம்: 22:40 (11/07/2018)

கடைசி தொடர்பு:13:06 (12/07/2018)

`தமிழகத்தில் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திப்போம்’ - பா.ஜ.க பொதுச் செயலாளர் தகவல்!

2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைப்போம் எனப் பாரதிய ஜனதா கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் பூபேந்திர யாதவ் நெல்லையில் தெரிவித்தார். 

பூபேந்திர யாதவ்

சுதந்திரப் போராட்ட வீரரான அழகுமுத்துக்கோன் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கட்டலாங்குளத்தில் உள்ள அவரது நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்திய பின்னர், நெல்லை வந்த பாராதிய ஜனதா கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் பூபேந்திர யாதவ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளில் மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. மக்களின் தேவைகளை நிறைவேற்றி இருக்கிறோம். எல்லா மாநில மொழிகளும் பாதுகாக்கப்பட வேண்டும். எல்லா மாநிலத்தில் உள்ளவர்களுக்கும் அனைத்துத் திட்டங்களும் அதிகாரங்களும் சமமாகக் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆட்சிக்கு வந்தோம். அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையிலேயே பணியாற்றி வருகிறோம். ஆதார் கொண்டுவரப்பட்டதன் மூலம் பொதுமக்கள் தங்களது பலன்களை நேரடியாகப் பெற்றுக்கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கிறது. 

அனைவருக்கும் வங்கிக் கணக்கு, ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் கொண்டுவரப்பட்டு ஏழை எளிய மக்களின் பொருளாதார நிலை மேம்பாடு அடைந்துள்ளது. விவசாயிகளின் மீது அக்கறை கொண்டவராகப் பிரதமர் மோடி உள்ளார். அதனால்தான் நெல்லுக்கான ஆதார விலையைக் கூடுதலாக்கி இருக்கிறார். 2014-ம் ஆண்டு பா.ஜ.க வெற்றி பெற்றபோது 5 மாநிலங்களில் ஆட்சி இருந்தது. தற்போது 19 மாநிலங்களில் உள்ளது. 2019-ல் நடைபெற உள்ள நடாளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றி பா.ஜ.க வெற்றி பெறும். பாரதிய ஜனதா கட்சியால் மட்டுமே ஊழலற்ற ஆட்சியைத் தரமுடியும். தமிழகத்தைப் பொறுத்தவரை கூட்டணியுடன் தேர்தலைச் சந்திப்போம், கூட்டணி குறித்து அடுத்த 3 மாதகாலத்தில் முடிவு செய்வோம்’’ எனத் தெரிவித்தார். பேட்டியின்போது மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உடனிருந்தார்.