வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (11/07/2018)

கடைசி தொடர்பு:13:05 (12/07/2018)

`எடப்பாடிக்கும் தனியார் முதலாளிகளுக்கும் மட்டுமே பலன்’ - கொந்தளிக்கும் இளைஞர் பெருமன்றத்தினர்!

இளைஞர் பெருமன்றத்தினர்

சேலம் டு சென்னை 8 வழிச் சாலை திட்டத்தை எதிர்த்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பாகக் கலெக்டர் அலுவலகத்தின் எதிரே போராட்டம் நடத்த காவல்துறையில் அனுமதி கேட்டார்கள். ஆனால், காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து தடையை மீறி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சேர்ந்த 11 இளைஞர்கள் போராட்டம் செய்து கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இதுபற்றி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்டச் செயலாளர் ரமேஷ் கூறுகையில், ``சேலம் டு சென்னை 8 வழிச் சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, விவசாயிகளும் பாதிக்கப்படுகிறார்கள். இந்த 8 வழிச் சாலையால் எடப்பாடி பழனிசாமியும் தனியார் முதலாளிகளும் மட்டுமே பலனடைவார்கள். இது விவசாயிகளுக்கும் தமிழக மக்களுக்குமே ஆபத்தானது. தமிழக அரசும் மத்திய அரசும் இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும்.

இந்தச் சாலை போட்டால் சேலத்திலிருந்து 3 மணி நேரத்தில் சென்னைக்கு போய்விடலாம் என்று பொய் சொல்கிறார்கள். உளுந்தூர்பேட்டை ரோட்டை சரி செய்தாலே சேலத்திலிருந்து சென்னைக்கு விரைவாகப் போக முடியும். இந்த 8 வழிச் சாலையால் விளைநிலங்கள், மலைகள், நீர்நிலைகள் பாதிக்கப்படுவதோடு பண்பாடும் அழிந்துபோகும். 8 வழிச்சாலை அமைந்தால் தமிழ்நாடு மற்றும் சேலம் வளர்ச்சி பெறும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழகத்தில் மோடியின் பினாமி ஆட்சி நடந்து வருகிறது. தமிழக ஆட்சியாளர்கள் பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும் கோடிக்கணக்கில் கமிஷன் கிடைக்கும் என்பதற்காகவும் இந்தத் திட்டத்தை நிறைவேற்றத் துடிக்கிறார்கள். பா.ஜ.க-வின் கைப்பாவை அ.தி.மு.க அரசு என்பதை மக்கள் நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும்'' என்றார்.