மது போதையில் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகரைத் தாக்கிய போலீஸார்!

தேனி மாவட்டம் போடியில் மதுபோதையில் கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகரை போலீஸார் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கம்யூனிஸ்ட்

போடி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ளது கருப்பசாமி கோயில் தெரு. இந்தத் தெருவின் நுழைவாயிலில் இன்று மாலை வாகனச் சோதனையில், காவலர்கள் ஆனந்த் மற்றும் ஜெயராமன் இருவரும் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் வசிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர பொதுக்குழு உறுப்பினர் பிரபு (40) என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் தெருவுக்குள் நுழைய முயன்றார். அவரை சோதனை செய்ய முயன்றபோது, வீடு அருகில் உள்ளது என்று கூறிவிட்டு நிற்காமல் சென்றுள்ளார். இதனால் கோபமடைந்த காவலர்கள் இருவரும் அவரது வீட்டுக்கே சென்று தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர். இருதரப்புக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. இதை அருகில் இருந்த நபர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில், பிரபுவை இருவரும் சரமாரியாகத் தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. கோபத்தின் உச்சிக்குச் சென்ற ஒருவர் தனது போலீஸ் பெல்ட்டை கழட்டி அடிக்கும் காட்சியும் பதிவாகியுள்ளது. தாக்கிய இருவரில் ஒருவர் மது போதையில் இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும், பிரபு நேர்மையான மனிதர். அவருக்கு காலில் பிரச்னை உள்ளது. வீடுதேடி வந்து போலீஸார் அடிக்கும் அளவுக்கு அவர் என்ன தவறு செய்தார் என்று கோபமாகக் கேட்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

இது தொடர்பாகக் காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, "டிடி எனப்படும் மதுபோதையில் வாகனத்தை இயக்கியவர்களைத் தினமும் பிடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு இத்தனை பேர் என்று கணக்கு உள்ளது. இது மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் உத்தரவு. அதனால்தான் ரோட்டில் போகிறவர்களை எல்லாம் வாகன சோதனை என்று நிறுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனாலேயை இது போன்றதொரு சம்பவம் நடந்திருக்கிறது" என்றனர். இது தொடர்பாகப் போடி நகரக் காவல் அதிகாரிகளைத் தொடர்புகொண்டபோது, "இது தொடர்பாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினர். கடந்த வாரம், போடி நகரத்தில் வார்டு ஒன்றுக்கு ஒரு போலீஸ் என்ற முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த வார்டு போலீஸ் மூலம் குற்றங்கள் கட்டுப்படுத்தப்படும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது போலீஸார் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!