`கும்பகோணம் நீதிமன்றத்தில் பழநி முருகன் சிலை ஒப்படைப்பு' - ஆர்வத்துடன் கூடிய பொதுமக்கள்!

பழநி முருகன் கோயிலில் புதிதாக செய்யப்பட்ட சிலையில் முறைகேடுகள் நடந்துள்ளதாக வழக்கு பதிவு செய்து, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கடந்த சில மாதங்களாக விசாரணை செய்து வருகிறார்கள். இந்நிலையில், பழநி முருகன் கோயில் சிலை இன்று கும்பகோணம் நீதிமன்றத்தில் இன்று ஒப்படைக்கப்பட்டது. இதனால் நீதிமன்றத்தில் ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் குவிந்திருந்தார்கள்.

பழனி முருகன் சிலை

பழநி முருகன் கோயில் மூலவர் சந்நிதியில் வைக்கப்பட்டுள்ள மிகவும் பழைமையான நவபாஷான சிலை சேதமடைந்துள்ளதாகக் கூறி, சில ஆண்டுகளுக்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறையின் ஏற்பாட்டில் புதிய ஐம்பொன் சிலை செய்யப்பட்டு அங்கு வைக்கப்பட்டது. இந்தச் சிலையின் நிறம் மாறி கறுப்பாக தோற்றமளித்ததால், இதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையில் இறங்கிய சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார், தமிழக அரசின் முன்னாள் தலைமை ஸ்தபதி முத்தையா, இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளான கே,கே ராஜா, தனபால் உள்ளிட்டவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பழனி முருகன் சிலை

இந்த வழக்கு விசாரணை பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், சில நாள்களுக்கு முன்பு பழநி முருகன் கோயில் அடிவாரத்தில் உள்ள இந்துசமய அறநிலையத்துறை அலுவலகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு முக்கிய ஆவணங்கள் எரிந்தன. இது திட்டமிட்டு நடத்தப்பட்ட விபத்தாக இருக்கலாம் எனவும் சர்ச்சை எழுந்தது. முறைகேடு நடந்துள்ளதாக சொல்லப்படும் சிலையானது, பழநி முருகன் கோயிலில் இருப்பது பாதுகாப்பாக இருக்காது என சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார், கும்பகோணம் நீதிமன்றத்தில் முறையிட்டனர். இதனால் இந்தச் சிலையை நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டப்பட்டது. இந்நிலையில், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, இன்று கும்பகோணம் கொண்டு வரப்பட்டு, இன்று மாலை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.பொன்மாணிக்கவேல், ஏ.டி.எஸ்.பி ராஜாராமன் உள்ளிட்டோர் சட்ட ரிதியான நடைமுறைகளை மேற்கொண்டார்கள். சிலையை பார்க்க, நீதிமன்ற வளாகத்தில் ஏராளமான பொதுமக்கள் குவிந்திருந்தார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!