`பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலைசெய்வதில் உறுதியாக உள்ளோம்' - கடம்பூர் ராஜு!

'ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதில் உறுதியாக உள்ளோம். அதேபோல, பேரறிவாளன், முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுதலைசெய்வதிலும் தமிழக அரசு உறுதியாக உள்ளது' என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். 

கடம்பூர் ராஜு

துாத்துக்குடி மாவட்டம்  கட்டலாங்குளம் கிராமத்தில் சுதந்திரப்போராட்ட வீரர் அழகுமுத்துகோனின் பிறந்தநாள் விழாவில், அரசு சார்பில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துகொண்டு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைசெய்தார். தொடர்ந்து நலத்திட்ட  உதவிகளை வழங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, "மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தும் மக்களின் கோரிக்கையை  ஏற்றும் தூத்துக்குடியில்  ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட  அரசாணை பிறப்பிக்கப்பட்டு, ஆலையை மூடிடவும் தமிழக அரசு உத்தரவிட்டு சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. 

இந்த முடிவில் அரசு உறுதியாக உள்ளது. அங்கு பணிபுரிந்து வந்தவர்களுக்கு மாற்றுப்பணி வழங்குவதற்காக, மாவட்ட நிர்வாகம் சார்பில் தனி இணையதளச் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல, ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு ஆலை தரப்பில் செய்யப்பட்டு வந்த வசதிகளைவிடவும் கூடுதலாக, தரமான அடிப்படை வசதிகள், மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்துதரப்படும். 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி  உள்ளிட்ட 7 பேரையும் விடுதலைசெய்ய வேண்டும் என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாதான் முதன் முதலில் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். ராஜீவ் காந்தியின் குடும்பத்தினர், தற்போது அவர்களை மன்னித்துவிட்டோம் என்று கருத்து தெரிவிக்கின்றனர். அவர்களது கருத்தை மத்திய அரசு ஏற்றுக்கொள்கிற நிலையில், தமிழக அரசு 7 பேரை விடுதலைசெய்வதில் உறுதியாக  உள்ளோம்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!