வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (12/07/2018)

கடைசி தொடர்பு:12:57 (12/07/2018)

புகார் அளித்துவிட்டு வெளியே வந்த பெண் வெட்டிக் கொலை!- காவல் நிலைய வாசலில் நடந்த பயங்கரம்

ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு வெளியே வந்த பெண்ணை, காவல் நிலையம் எதிரேயே வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தலைமறைவானவரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

கொலை

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த செங்காடு பகுதியைச் சேர்ந்தவர் கணவனை இழந்த சுகுணா (45). இவர் இன்று மாலை 4.30 மணிக்கு ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு வெளியே வந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர், காவல் நிலையத்தின் எதிரே சென்று கொண்டிருந்த சுகுணாவை கத்தியால் வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இக்கொலை குறித்து காவல் துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், வாங்கூர் பகுதியைச் சேர்ந்த சுரேந்திரன் என்பவருக்கும் இறந்து போன சுகுணா என்பவருக்கும் மறைமுகத் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று மாலை சுகுணாவின் வீட்டுக்கு குடித்துவிட்டுச் சென்ற சுரேந்திரன் சுகுணாவை பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அவர்களுடைய வாக்குவாதம் முற்றவே அங்கிருந்த கல்லை எடுத்து சுகுணாவை தாக்கிவிட்டு வீட்டில் இருந்த 1000 ரூபாயை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார். இதைத் தொடர்ந்து சுரேந்திரன் மீது ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சுகுணா புகார் அளிக்க வந்துள்ளார். இதை அறிந்துகொண்ட சுரேந்திரன் சுகுணாவைப் பின்தொடர்ந்து வந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு வெளியே வந்த சுகுணாவை காவல் நிலையத்தின் அருகிலேயே துரத்திச் சென்று வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இச்சம்பவம் குறித்து ராணிப்பேட்டை டி.எஸ்.பி கலைச்செல்வன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க