குழந்தைகளுக்கு வாங்கிய கொசுவலையில் கொள்ளையா?

கிறிஸ்டி ஃபிரைடு கிராம் நிறுவனத்தில் தொடந்து 5 நாள்கள் 76 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடந்ததை அடுத்து தமிழகத்தில் உள்ள 9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், 5 அமைச்சர்களுக்கு அடிவயிறு கலக்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகளுக்கானத் திட்டத்தின் மூலம் அங்கன்வாடி மையத்துக்கு கொசுவலை வாங்கியதிலும் கொள்ளை அடித்திருக்கிறார்கள் என்ற தகவல் காட்டுத் தீ போல பரவி வருகிறது.

இதுபற்றி சமூக நலத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி, ``தமிழக சமூக நலத்துறை மூலம் வழங்கப்படும் அனைத்து நலத் திட்ட உதவிகளுக்கும் மொத்த குத்தகைதாரராக கிறிஸ்டி நிறுவனத்தின் உரிமையாளர் குமாரசாமி இருந்து வந்தார். அவர் ஆட்சியாளர்களோடும், அதிகாரிகளோடும் கூட்டு சேர்ந்து குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் முட்டை, சத்துமாவில் கோடி கோடியாக கொள்ளை அடித்ததால் வருமான வரித்துறை ரெய்டு நடந்தது. இந்த வருமானவரிச் சோதனை மட்டும் போதாது. இதற்கு பக்க பலமாக இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் அம்பலப்படுத்த வேண்டும்.

இதேபோல சமூக நலத்துறையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகளுக்கான திட்டம் (ஐ.சி.டி.எஸ்.,) மூலம் 15 கோடியே 59 லட்சத்துக்கு அங்கன்வாடி குழந்தைகளுக்கு கொசுவலை வாங்குவதற்காக சமூக நலத்துறையின் செயலாளர் மணிவாசன் ஐ.சி.டி.எஸ்  துறையின் இயக்குநர் கண்ணனிடம் தெரிவித்தார். அதையடுத்து கொசுவலைக்கு டெண்டர் விடப்பட்டது. அந்த டெண்டரை கிறிஸ்டி நிறுவனத்தின் பினாமி நிறுவனமான கணேஷ் டிரேடர்ஸ் டெண்டர் எடுத்தது. டெண்டர் விட்டு 8 மாதம் ஆகியும் இன்னும் பல மாவட்டங்களுக்கு கொசுவலை கொடுக்கவில்லை'' என்றார்.

இதுபற்றி சேலம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்துக்கான மாவட்ட திட்ட அலுவலர் தேவிகுமாரியிடம் கேட்டபோது, ``தமிழகத்திலேயே முதன் முதலாக நம்ம மாவட்ட கலெக்டர் டெங்கு காய்ச்சலை அடுத்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் 2,435 அங்கன்வாடி மையங்களுக்கு கொசுவலை வழங்கினார். அதையடுத்து எங்க ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் துறையின் மூலம் 1667 வழங்கப்பட்டது. இந்தக் கொசுவலை 10 அடி நீளம், 6 அடி உயரம், 6 அடி அகலம் உடையது. இதில் 15 முதல் 20 குழந்தைகள் படுத்துக்கொள்ளலாம். சேலம் மாவட்டத்தில் 2,290 அங்கன்வாடி மையங்கள் இருக்கிறது. குழந்தைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து வழங்கி இருக்கிறோம். இதேபோல எல்லா மாவட்டத்திலும் வழங்கப்பட்டிருக்கிறது'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!