வெளியிடப்பட்ட நேரம்: 08:51 (12/07/2018)

கடைசி தொடர்பு:12:42 (12/07/2018)

``எங்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் பொய் என நிரூபித்துள்ளோம்" - எம்.பி திருச்சி சிவா

தி.மு.க. சார்பில் வரும் ஆகஸ்டு மாதம் 30-ம் தேதி மாநில சுயாட்சி பாதுகாப்பு மாநாடு சென்னையில் நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிதழை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் உள்ளிட்ட அகில இந்தியத் தலைவர்களைச் சந்தித்து அழைப்பு விடுக்கும் விதமாக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை வழங்கி வரும் எம்.பி திருச்சி சிவா, நேற்று மாலை திருச்சியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

திருச்சி சிவா

அப்போது திருச்சி சிவா, ``நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் பேசும்போது 22 மொழிகளில் மொழிபெயர்ப்பு வசதி வரும் கூட்ட தொடர் முதல் நடைமுறைக்கு வருகிறது. மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் தி.மு.க-வின் கொள்கை நடைமுறைக்கு வருவது மகிழ்ச்சி. இது தி.மு.க-வின் நீண்ட காலப் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. தி.மு.க தாய்மொழியை முன்னிறுத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தமிழ்நாடு பல மாநிலங்களுக்கு முன்னோடியாக இருந்து வருகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

மாநில சுயாட்சியின் தேவை தொடர்ந்து இருந்தாலும் தற்போது அதன் தேவை அதிகமாகி உள்ளது. மத்திய அரசு மாநிலங்களின் உரிமைகளைத் தொடர்ந்து பறித்து வருகிறது. அதனால்தான் தி.மு.க தற்போது மாநில சுயாட்சி மாநாடு நடத்துகிறது. தி.மு.க நடத்தும் மாநில சுயாட்சி மாநாடு காலத்தின் கட்டாயம்” என்றார்

அமித் ஷா சென்னையில் பேசியவை குறித்தான கேள்விக்குப் பதில் அளித்த அவர், ”தமிழ்நாடு முன்னேறி இருந்த அளவுக்கு வேறு எந்த மாநிலமும் முன்னேறவில்லை. இது 50 ஆண்டுகால திராவிட இயக்கத்தின் சாதனை. எங்கள் மீது வைத்த ஊழல் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை. அந்த ஊழல் குற்றச்சாட்டுகளைப் பொய் என நாங்கள் நிரூபித்துள்ளோம்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க