உறவுகளால் தவிக்கவிடப்பட்ட தாய்... ஆதரவு தந்த அன்பின் மனிதர்கள்! | A woman left out by her family gets support from kind-hearted people

வெளியிடப்பட்ட நேரம்: 08:49 (12/07/2018)

கடைசி தொடர்பு:12:15 (12/07/2018)

உறவுகளால் தவிக்கவிடப்பட்ட தாய்... ஆதரவு தந்த அன்பின் மனிதர்கள்!

உறவுகள் உதறித்தள்ள, பேருந்துநிறுத்தத்தில் குடியிருந்து வலிமிகு பாசப்போராட்டம் நடத்திய பவளக்கொடி அம்மாவுக்கு, விகடன் இணையதளச் செய்தி எதிரொலியால் அன்பும் ஆதரவும் கிடைத்திருக்கிறது.

கிழிந்த உடை, வழிப்போக்கர்கள் வாங்கித் தரும் டீ, வடையை மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழ்ந்துவந்த பவளக்கொடி அம்மாவுக்கு, நல்ல சாப்பாடு, தூய உடை, பாதுகாப்பான தங்கும் இடம் கிடைத்திருக்கிறது. டெம்போ வேன் மோதி முறிந்த அவரது இடதுகாலுக்கு வைத்தியம் பார்க்க வழி கிடைத்திருக்கிறது. ``பவளக்கொடி அம்மாவுக்கு இரண்டொரு நாளில் உரிய உதவிகளைச் செய்கிறோம்" என்று நம்மிடம் உத்தரவாதமளித்த `இணைந்த கைகள்' அமைப்பு, சொன்னபடியே அவரை மீட்டு, அவருக்கு நல்வினை கிடைக்க வழிவகை செய்திருக்கிறது.

 பவளக்கொடி

விகடன் இணையதளத்தில் கடந்த ஜூலை 7-ம் தேதி, பவளக்கொடி அம்மாவின் கண்ணீர்க் கதையை வெளியிட்டிருந்தோம். ``அவ அப்படியே சாகட்டும்னு பிள்ளைக சொல்லிடுச்சுங்க!" - பேருந்துநிலையத்தில் குடியிருக்கும் பவளக்கொடி' என்ற தலைப்பைத் தாங்கி வந்த அந்தக் கட்டுரை, படித்த வாசகர்களை கண்ணீர் வடிக்கவைத்தது.

கரூர் மாவட்டம், கொப்பம்பட்டியைச் சேர்ந்த பவளக்கொடி அம்மாவை, உறவுகள் கைகழுவிவிட்டன. மூன்று பிள்ளைகள் அவரைத் தவிக்கவிட, குடிகாரக் கணவரோ அடித்துத் துரத்தியிருக்கிறார். அந்த வெறுப்பில் சில மாதங்களுக்கு முன்னர் மனம் போனபோக்கில் சென்றவரை, டெம்போ வேன் ஒன்று அடித்துப் போட்டுவிட்டுப் போய்விட்டது. இடதுகால் எலும்பு முறிந்து நடக்கச் சிரமப்பட்ட அவர், கரூர் மாவட்டம் புத்தாம்பூர் என்ற இடத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தையே வீடாகக்கொண்டு வாழ்ந்துவந்தார்.

காலில் வைத்தியம் பார்க்காததால், செப்டிக் ஆகி ரண வலி கொடுத்திருக்கிறது. அவருக்கு வைத்தியம் பார்க்க உதவிசெய்ய பலர் முன்வந்தனர். ஆனால், ``பெத்த பிள்ளைகளோ, கணவரோ வந்தாதான் வைத்தியம் பார்த்துக்குவேன்'' என்று வராத உறவுகளுக்காக வைராக்கியமாக பாசப்போராட்டம் நடத்தினார். அந்த வழியாகப் போன நமது பார்வையில் பட்ட பவளக்கொடி அம்மாவின் கண்ணீர் கதையைதான் நாம் செய்தியாக வெளியிட்டிருந்தோம். செய்தி வெளிவந்த அன்றே நேராக புத்தாம்பூருக்குப் போய் பவளக்கொடி அம்மாளைப் பார்த்திருக்கிறார் `இணைந்த கைகள்' என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சாதிக் அலி. பார்த்த கணமே மனம் பதற, சாப்பாடு வாங்கிக் கொடுத்திருக்கிறார். பசியால் துடித்துக் கிடந்த அவர், சாப்பாட்டைச் சாப்பிட்ட வேகம் பார்த்தவர்களை கண் கலங்கவைத்தது. 

 பவளக்கொடி

இந்நிலையில், ``என் கணவரும் பிள்ளைகளும் வரும்வரை இந்த இடத்தைவிட்டு இம்மியளவும் நகர மாட்டேன்'' என்று வைராக்கியம் காட்டினார் பவளக்கொடி. ஆனால், ``நாங்கள்தான் உங்களுக்கு உண்மையான பிள்ளைகள். உங்களைத் தாயாக, மனைவியாக ஏற்றுக்கொள்ளாத உறவுகளுக்காக நீங்கள் இப்படிக் கஷ்டப்படுகிறீர்கள். அவர்கள் உங்களைத் துச்சமென நினைக்கிறார்கள். ஆனால், உங்களைத் தாயாக மதிக்கும் எங்க பாசத்துக்குக் கட்டுப்படுவதில் என்ன தயக்கம்? எங்களை உங்க பிள்ளைங்களா ஏத்துக்க மாட்டீங்களா?" என்று உருக்கமாகக் கேட்டிருக்கிறார்கள் மீட்டவர்கள்.

ஒரு கணம் அமைதியாக யோசித்த பவளக்கொடி, சடாரென நிமிர்ந்து ``வாங்க போலாம்" என்றபடி அன்புக்கரங்கள் அமைப்பின் ஆம்னி வேனில் ஏறி அமர்ந்துகொண்டார். ஒரு தாயின் வீணான பாசப்போராட்டத்தை முறித்துப் போட்டுவிட்டு, உண்மையான பாசத்தை அவருக்கு உணரவைத்துவிட்ட திருப்தியில் சாதிக் அலியும் சேகரும் பவளக்கொடி அம்மாவின் இருபுறமும் அமர்ந்துகொண்டனர். 9-ம் தேதி தனது நிர்வாகிகளோடு சாதிக் அலியும், ஐந்து பேரோடு போன அன்புக்கரங்கள் செயலாளர் சேகரும், பவளக்கொடி அம்மாவை மீட்டு காப்பகத்தில் சேர்த்திருக்கிறார்கள்.


டிரெண்டிங் @ விகடன்