வெளியிடப்பட்ட நேரம்: 11:30 (12/07/2018)

கடைசி தொடர்பு:12:35 (12/07/2018)

மதுராந்தகம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. உக்கம்சந்த் காலமானார்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது மதுராந்தகம் தொகுதி. இப்பகுதியில் தாழ்த்தப்பட்டவர்கள் அதிகம் வசிக்கின்றனர். இப்பகுதி தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைக்காக அதிகம் குரல் கொடுத்தவர் உக்கம்சந்த். தனது 17-வது வயதிலேயே அரசியலுக்கு வந்தவர். காங்கிரஸ் கட்சியில் இருந்த இவருக்கு 1980ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க-வில் இணைந்தார்.

உகம்சந்த் மதுராந்தகம்

அடுத்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் நின்று வெற்றிபெற்றார். மதுராந்தகம் மார்க்கெட் பகுதியில் அடகுகடை வைத்திருந்தார். தாழ்த்தப்பட்டவர்கள், ஏழை விவசாயிகள் என இவரிடம் நகை வைத்துக் கடன் வாங்குவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்கள். ஏழை மக்களுக்கு வட்டி தள்ளுபடி செய்து கடன் வழங்குவதால் இவருக்கு அப்பகுதி மக்களிடம் செல்வாக்கு அதிகரித்தது. 1987-ல் தி.மு.க வேட்பாளர் ‘மதுராந்தகம்’ ஆறுமுகத்தை எதிர்த்து வெற்றி பெற்றார். எம்.ஜி.ஆர் மறைவின்போது அ.தி.மு.க இரண்டு அணியாக உடைந்தது. அப்போது சேவல் அணியில் ஜெயலலிதாவுக்கு பக்கபலமாக நின்றவர் உக்கம்சந்த். 1996ல் அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.வில் இணைந்தார். கடைசியாக தூத்துக்குடி சம்பவத்தைக் கண்டித்து மதுராந்தகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு ஸ்டாலினுடன் கைதானார். அப்போது இவர் உடல் நலம் குறித்து ஸ்டாலின் நலம் விசாரித்தார். இந்த நிலையில், உடல் நலக்குறைவால் உக்கம்சந்த் நேற்றிரவு காலமானார். இவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவரின் மறைவு மதுராந்தகம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க