வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (12/07/2018)

கடைசி தொடர்பு:12:33 (12/07/2018)

ராமஜெயம் கொல்லப்பட்ட இடத்தில் கிடந்த சடலம்! பிஸியோ தெரப்பிஸ்ட்டுக்கு நடந்த கொடுமை

ராமஜெயம் கொலை செய்யப்பட்டுக் கிடந்த பகுதியில் அழுகிய நிலையில் வாலிபர் ஒருவர் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்யப்பட்ட பிஸியோ தெரப்பிஸ்ட்

முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம், மர்மநபர்களால் கடத்திக் கொலை செய்யப்பட்டு திருச்சி திருவளர்ச்சோலை கல்லணை காவிரிக் கரையோரத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அதே திருச்சி திருவானைக்காவலை அடுத்த திருவளர்ச்சோலையில் புத்துநாகம்மன் கோயில் அருகே காவிரி ஆற்றுப் பகுதியில் நேற்று துர்நாற்றம் வீசியது. இதனால் அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்தபோது, துர்நாற்றம் வீசிய காவிரி ஓரத்தில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்தார்.  இதையடுத்து. தகவலறிந்த திருச்சி ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் உமாசங்கர், எஸ்.ஐ அழகர் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில்,  இறந்தவர் கறுப்புநிற டி-ஷர்ட்டும், நீலநிற ஜீன்ஸ் பேன்ட்டும் அணிந்திருந்ததும், அவரின் கைவிரலில் சாய்பாபா உருவம் பொறித்த மோதிரமும், கழுத்து, மார்புப் பகுதியில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திக்குத்துக் காயங்கள் இருந்தது தெரியவந்தது.

உடலிலிருந்து ரத்தம் வழிந்தோடிக் கிடந்த அவர், இறந்து மூன்று நாள்களுக்கும் மேல் இருக்கலாம் எனத் தெரியவந்தது. இதையடுத்து மோப்பநாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் உடல் கிடந்த இடத்திலிருந்து, காவிரி ஆற்றுக்குள் சிறிதுதூரம் ஓடிச் சென்று நின்றுவிட்டது. இதனால் கொலை செய்யப்பட்டுக் கிடந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என போலீஸார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

போலீஸாரின் விசாரணையில், அரியலூர் மாவட்டம் செந்துறை பொன்பரப்பி பகுதியைச் சேர்ந்த பிஸியோ தெரப்பிஸ்ட் விஜயகுமார் என்பவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு திடீரென மாயமாகி இருந்ததும், இதுகுறித்து அவரின் மனைவி கற்பகாம்பிகா செந்துறை காவல்நிலையத்தில் கடந்த 9-ம் தேதி புகார் அளித்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து விஜயகுமாரின் உடலைக் கைப்பற்றிய போலீஸார், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விஜயகுமாரின் மனைவி கற்பகாம்பிகாவை ஸ்ரீரங்கம் வரவழைத்து உடலை அடையாளம் கண்டனர். அப்போது கணவரின் உடலைப் பார்த்த கற்பகாம்பிகா, கதறியது பலரையும் உறைய வைத்தது.

பிஸியோ தெரப்பிஸ்ட் விஜயகுமார், ஏன் கொலை செய்யப்பட்டார். அவருக்கு யாருடனாவது முன்விரோதம் இருந்து வந்ததா என்கிற கோணத்தில் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு, திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் லாரி ஓட்டுநர் ஆண்டவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் மேலூர் அருகே கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் அரியலூரைச் சேர்ந்த பிஸியோ தெரப்பிஸ்ட் விஜயகுமார் கொலை செய்யப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க