வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (12/07/2018)

கடைசி தொடர்பு:12:32 (12/07/2018)

`முட்டை டெண்டரில் மீண்டும் கிறிஸ்டி நிறுவனம்? - அதிர்ச்சித் தகவல்

கிறிஸ்டி பிரைடு உள்ளிட்ட நிறுவனங்கள் மீது வரி ஏய்ப்பு புகார் எழுந்துள்ள நிலையில், முட்டை டெண்டரில் கிறிஸ்டி பிரைடுக்குக் காலநீட்டிப்பு வழங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிறிஸ்டி

தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்துக்கு ஒப்பந்தப் புள்ளிகள் அடிப்படையில் முட்டைகளை வழங்கி வரும் கிறிஸ்டி பிரைடு நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். தொடர்ந்து அந்நிறுவனம் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகப் புகார் எழுந்தது. இந்நிலையில், சத்துணவுத் திட்டத்துக்கான முட்டை வழங்கும் ஒப்பந்தம் ஜூலை 31-ம் தேதி முதல் காலாவதியாக உள்ள நிலையில், இதற்கான டெண்டர் நேற்று நடைபெற்றது. இதுதொடர்பாகச் சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் இணைச் செயலாளர், ரங்கபிரசாத்திடம் பேசியபோது, `சத்துணவுத் திட்டத்துக்குத் தமிழகத்தில் ஆண்டுக்கு 4,000 கோடி ஒதுக்கப்படுகிறது.

முட்டை

அதில் 481 கோடி முட்டைக்கும் 2,000 கோடி ரூபாய் சத்துமாவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. 481 கோடிக்கு நேற்று ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. இதில் மொத்தம் 6 நிறுவனங்கள் போட்டியிட்டன. இதில் கிறிஸ்டி பிரைடும் அதன் பினாமி நிறுவனங்களான சுவர்ணபூமி ஃபுட்ஸ், நெசுரல் ஃபுட்ஸ் உள்ளிட்ட 2 தனியார் நிறுவனங்களும், கோழிப் பண்ணை சங்கம் நிறுவனமும் கலந்துகொண்டன. இந்நிலையில், தற்போது கிறிஸ்டி பிரைடு நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுவருகிறது. கடந்த 2 ஆண்டுகளாகவே கிறிஸ்டி பிரைடு நிறுவனத்தை வருமானவரித்துறையினர் பின்தொடர்ந்துள்ளனர். அதன் அடிப்படையிலே இந்தச் சோதனையானது நடைபெற்றது. இந்த கிறிஸ்டி நிறுவனம் 2012-லிருந்து இதுவரை சத்துணவுத் திட்டத்தின் கீழ் முட்டைக்காக டெண்டர் எடுத்து வருகின்றது. ஓபன் டெண்டர் என்ற நடைமுறையின்படி கடந்த 2012-ம் ஆண்டு டெண்டர் முறையாகத்தான் நடைபெற்றது.

சட்ட பஞ்சாயத்துஇந்நிலையில், நேற்று தரமணியில் நடைபெற்ற டெண்டரில் பங்கேற்கச் சென்றபோது எங்களை அனுமதிக்கவில்லை. மறைமுகமாக டெண்டரை நடத்துகின்றனர். நேற்று இரவு 7.30 மணி வரை டெண்டர் முடிவை வெளியிடாமல் காலதாமதம் செய்தனர். பின்னர் அனைத்து டெண்டர்களையும் நிராகரித்ததாக தெரிவித்தனர். நிராகரித்ததற்காக அவர்கள் கூறிய காரணங்கள் எதுவும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாயில்லை. ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1லிருந்து ஜூலை 31 வரைக்கும் முட்டைக்கான ஒப்பந்தங்கள் போடப்படுவது வழக்கம். ஆனால், தற்போது இந்த டெண்டர்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஒப்பந்தப் புள்ளிகள் கோரும் பணி மீண்டும் புதிதாக தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படிச் செய்தால் இந்த டெண்டரை ஆகஸ்ட் 1க்குள்  நடத்தி முடிக்க வாய்ப்பில்லை. பள்ளிகளில் முட்டையில்லாமலும் இருக்க முடியாது என்ற காரணத்தினால், மீண்டும் கிறிஸ்டி நிறுவனத்துக்கான டெண்டருக்குக் காலநீட்டிப்பு வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் முட்டை விலை 3 ரூபாய் 65 காசுகள் இருந்தபோதே கிறிஸ்டி நிறுவனம் 4 ரூபாய் 61 காசுகள் எனக் கணக்குக் காட்டியுள்ளது. இதில் அதிகப்படியான ஊழல் நடைபெற்றுள்ளது. தமிழ்நாடு கொள்கை விளக்க குறிப்பில் சத்துணவுக்காக வழங்கப்படும் முட்டையின் எடை 46 கிராம் இருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த டெண்டரின் மூலம் வழக்கப்படும் முட்டையின் எடை 45 கிராம்தான். ஆந்திராவில் முட்டை கொள்முதல்  பொறுத்தவரை இ- டெண்டர் முறை அமலில் உள்ளது. எல்.சி.டி திரையில் காட்சிப்படுத்தப்பட்டு வெளிப்படையாக நடைபெறுகிறது. ஆனால், தமிழகத்தில் மறைமுகமாக நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு டிரான்பரன்சி ஆக்ட் 1998-ஐ முறையாகப் பின்பற்றாமலே டெண்டர் விடப்படுகிறது. புதிதாகக் கோரும் டெண்டரிலாவது வெளிப்படைத்தன்மை வேண்டும்' என்று பேசி முடித்தார்.