`இந்த விருதுக்குப் பின்னால் ஆயிரம் மனவருத்தங்கள்'- மனம் திறக்கும் கனவு ஆசிரியை கவிதா

ஆசிரியை  கவிதா

`கனவு ஆசிரியர்' விருது பெற்ற ஆசிரியை கவிதாவுக்கு, சாதனைக்குப்பின் மனக் கசப்பான சம்பவங்கள் மறைந்திருக்கின்றன. அதையெல்லாம் கடந்து, நீண்ட போராட்டத்துக்குப்பிறகு அவருக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனவு ஆசிரியர் விருதைப் பெற்றுள்ளார் செங்கல்பட்டு அருகே உள்ள தென்பாதி, மாமண்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியையாகப் பணியாற்றும் கவிதா. அமைச்சர் செங்கோட்டையன் கையால் விருது பெற்ற ஆசிரியை கவிதாவை மாலை நேரத்தில் சந்தித்தோம். அவரின் முகம், மகிழ்ச்சியில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் போல பிரகாசித்தது. 

`கனவு ஆசிரியர்' விருதை எப்படிப் பார்க்கிறீர்கள்? 

``முன்பெல்லாம் தலைமை ஆசிரியர்களுக்கு மட்டும்தான் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. பள்ளிகளில் சிறப்பாகச் செயல்படும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களை ஊக்கப்படுத்தவும் உற்சாகப்படுத்தவும் `கனவு ஆசிரியர்' விருதை தமிழக அரசு வழங்கியுள்ளது. இதன்மூலம் திறமையான ஆசிரியர்கள் வெளியில் தெரிய வாய்ப்புள்ளது. இந்த விருதை முதல் பேட்ஜில் நான் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.'' 

இந்த விருது உங்களுக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்த்தீர்களா?

``இல்லை. நான் என்னுடைய கடமையைச் செய்தேன். நான் பணியாற்றும் அரசுப் பள்ளியின் கல்வித் தரத்தை உயர்த்த உழைத்தேன். அதனால், கல்வி அதிகாரிகள் என்னுடைய பெயரை விருதுக்கு சிபாரிசு செய்துள்ளனர். விருது கிடைக்க வழிவகுத்த மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் தயாளன் மற்றும் கல்வி உயர் அதிகாரிகள், பள்ளிக்கல்வி துறையினருக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் சமயத்தில் நான் பணியாற்றும் மாமண்டூர் கிராம மக்களுக்கு நன்றி சொல்லவிரும்புகிறேன். அவர்கள் இல்லையென்றால் நான் இல்லை. என்னுடைய ஒவ்வொரு செயலுக்கும் அவர்கள் உறுதுணையாக இருந்தனர்." 

உங்களுக்கு விருது கிடைத்ததை பள்ளியில் எப்படிப் பார்க்கிறார்கள்? 

``மாமண்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கே கிடைத்த அங்கீகாரமாகத்தான் இந்த விருதை நான் பார்க்கிறேன். தலைமை ஆசிரியர் முதல் என்னுடன் பணியாற்றும் சக ஆசிரியர்கள் வாழ்த்துகள் தெரிவித்தனர். அதோடு மாணவர்கள், தினம் தினம் கேக் வெட்டிக் கொண்டாடுகிறார்கள். அதைப்பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதுபோன்ற விருதுகள் மற்ற ஆசிரியர்களுக்கு நிச்சயம் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தும். அடுத்து வழங்கப்படும் `கனவு ஆசிரியர்' விருதைப் பெற அவர்களும் முயற்சி செய்வார்கள்".

நீங்கள் அட்மினாக இருக்கும் வாட்ஸ்அப் குழுவுக்கு `கனவு ஆசிரியர்' என்ற பெயர் வைத்துள்ளதாகத் தகவல் உள்ளதே?
 
 ``நான் பணியாற்றும் ஒன்றியத்தில் சிறப்பாக செயல்படும் அரசுப் பள்ளி ஆசிரியர்களை இணைத்து `கனவு ஆசிரியர்' என்ற பெயரில் வாட்ஸ்அப் குழு இயங்கிவருகிறது. இந்தக்குழுவில் அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்துவது, மாணவர்கள் மத்தியில் ஒரு ஆசிரியர் எவ்வாறு செயல்பட வேண்டும் போன்றவை குறித்து விவாதிக்கப்படும். மேலும், பல பயனுள்ள வீடியோக்களும் பகிரப்படும். என்னுடைய கனவு, இந்தக் கனவு ஆசிரியர் விருதால் நிறைவேறியிருப்பதாக நம்புகிறேன். அரசுப் பள்ளி வளர்ச்சிக்காகவும் மாணவர்களின் நலனுக்காகவும் என்னுடைய பயணம் தொடரும்". 

ஆசிரியை

 உங்கள் பணியின்போது ஏதாவது இடையூறுகள் ஏற்பட்டுள்ளதா?

``நானடைந்த வலிகளுக்கு மருந்தாக இந்த விருது அமைந்துள்ளது. தடைகளைத் தாண்டினால்தான் சாதனை புரிய முடியும். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனக் கசப்பான சம்பவங்களை வலிகளோடு கடந்திருக்கிறேன். அதற்கு கிடைத்த அங்கீகாரம்தான் இந்த விருது. ஒவ்வொரு அரசுப் பள்ளிகளிலும் ஓர் ஆசிரியர் சிறப்பாகச் செயல்பட்டால்போதும். அந்தப் பள்ளிக்கு பொதுமக்கள் நல்ல அங்கீகாரத்தை கொடுத்துவிடுவார்கள். உயர் வகுப்புகள் பயில இந்தக் கிராமத்தில் உள்ள மாணவர்கள் வெளியூர் செல்ல வேண்டியதுள்ளது. இதனால், சில மாணவிகள் படிப்பை பாதியில் நிறுத்திவிடுகின்றனர். எனவே, இந்தப் பள்ளியை மகளிர் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்திவிட்டுதான் வேறொரு பள்ளிக்குச் செல்வேன். என்கனவின் ஒருபகுதிதான் நிறைவேறியுள்ளது. நான் பணியாற்றும் பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தினால்தான் என்கனவின் மற்றொரு பகுதியும் நிறைவேறும். தற்போது அதற்கான முயற்சிகளில்தான் ஈடுபட்டு வருகிறேன். அரசால் வழங்கப்பட்ட பத்தாயிரம் ரூபாயை பள்ளியில் ஸ்மார்ட் போர்டு வாங்க பயன்படுத்துவேன்"

விருது பெற்ற கவிதா டீச்சரின் ஃப்ளாஸ்பேக் இதுதான். 

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியைச் சேர்ந்தவர் கவிதா. இடைநிலை ஆசிரியராக கடந்த 2002-ம் ஆண்டு பணிக்குச் சேர்ந்தார். மதுராந்தகம், மலைப்பாளையம் பள்ளியில் இரண்டாண்டுகள், உத்திரமேரூர், நெல்வாயில் உள்ள அரசுப் பள்ளியில் நான்காண்டுகள், தொடர்ந்து மாமண்டூர் அரசுப் பள்ளியில் 2008-ம் ஆண்டு முதல் இதுவரை பணியாற்றிவருகிறார். பள்ளியின் அடிப்படை வசதிகளை பொதுமக்களின் பங்களிப்போடு செய்து கொடுக்க முயற்சிகளை மேற்கொண்ட பெருமை கவிதா டீச்சரையே சாரும். பள்ளி வளாகத்திலேயே காய்கறித் தோட்டம் அமைத்து மாணவ, மாணவிகளுக்கு விவசாயத்தின் மீது அக்கறையை ஏற்படுத்தியவர். ஸ்மார்ட் கிளாஸ், கம்ப்யூட்டர் பயிற்சி, ஸ்போக்கன் இங்கிலீஸ் என அரசுப் பள்ளி மாணவர்களின் தரத்தை தனியார் பள்ளிக்கு நிகராக உயர்த்த பல முயற்சிகளை எடுத்துவருகிறார். இதனால்,  சில ஆண்டுக்கு முன் சிறந்த பள்ளியாக மாமண்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டது. 

மாணவ, மாணவிகளின் நலனில் மட்டுமல்லாமல் சமூக சேவைகளிலும் ஈடுபட்டுவருகிறார். பனை மரம் வளர்ப்பில் அக்கறை செலுத்திய கவிதா டீச்சர் மாமண்டூர் முழுவதும் பனை மரங்களை நட்டுள்ளார். தூக்கி எறியும் குடிநீர் பாட்டிலைக் கொண்டு பள்ளி வளாகத்தில் உள்ள மரத்துக்கு அரண் ஏற்படுத்தியுள்ளார். இப்படி கவிதா டீச்சரைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். அவருக்குதான் தமிழக அரசு அறிவித்த `கனவு ஆசிரியர்' விருது சமீபத்தில் வழங்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!