ஊழியரை அனுப்பி போலி வாக்காளர் அட்டை தயாரித்தவரை பொறிவைத்துப் பிடித்த கலெக்டர்!

மிழகம் முழுவதும் வாட்ஸ்அப்பில் விளம்பரப்படுத்தி போலி வாக்காளர் அடையாள அட்டை விநியோகித்த கோவையைச் சேர்ந்த சதீஷ்குமார் கைது செய்யப்பட்டார்.

போலி வாக்காளர் அட்டை

நாகர்கோவில் கோட்டாரில் போலி வாக்காளர் அடையாள அட்டைகள் அச்சடித்துக் கொடுப்பதாக எழுந்த புகாரையடுத்து நாகர்கோவில் கலெக்டர், அந்தக் கும்பலைப் பிடிக்கத் திட்டமிட்டார். இதற்காக தனது அலுவலக ஊழியர் ஒருவரை அனுப்பி இருக்கிறார். அவர் சாதாரண நபரைப்போன்று  அந்த கம்ப்யூட்டர் சென்டருக்குச் சென்று போலி வாக்காளர் அடையாள அட்டை கேட்டிருக்கிறார். 150 ரூபாய் வாங்கிக்கொண்டு போலி வாக்காளர் அடையாள அட்டை வழங்கியிருக்கிறது அந்த சென்டர். இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் அந்த கம்ப்யூட்டர் சென்டரில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு போலியான வண்ண வாக்காளர் அடையாள அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன. போலி அட்டைகள் தயாரித்ததாக செந்தில்குமார் (51), சுபாஷ் (23) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் தமிழகம் முழுவதும் இவர்களுக்கு நெட்வொர்க் இருப்பது தெரியவந்தது.

மேலும், வாக்காளர் அட்டை தேவைப்படுபவர்கள் தொடர்புகொள்ளலாம் என வாட்ஸ்அப்பில் விளம்பரப்படுத்தியதும் அம்பலமானது. கைது செய்யப்பட்ட இருவரிடமும் நடத்திய விசாரணையில் கோவையில் கம்ப்யூட்டர் சென்டர் வைத்திருக்கும் சதீஷ்குமார் இந்தத் திட்டத்துக்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கோவை சென்ற குமரி போலீஸார் சதீஸ்குமாரை நாகர்கோவில் அழைத்துவந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து இன்று அவர் கைது செய்யப்பட்டார். போலி வாக்காளர் அடையாள அட்டை தயாரித்த கும்பலைச் சேர்ந்த மேலும் சிலர் கைதாக வாய்ப்புள்ளதாக காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!