வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (12/07/2018)

கடைசி தொடர்பு:13:40 (12/07/2018)

ரவுடி, ரியல் எஸ்டேட் அதிபர் அடுத்தடுத்து கொலை! அடையாறில் நடந்த பயங்கரம்

கொலை செய்யப்பட்ட ரவுடி தனசேகர்

சென்னை திருவான்மியூர், அடையாறு பகுதியில் பிரபல ரவுடி, ரியல் எஸ்டேட் அதிபர் என இரண்டு பேர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெருங்குடி, கல்லுக்குட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் தனசேகர். பிரபல ரவுடியான இவர் மீது கொலை உள்ளிட்ட சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2013-ம் ஆண்டு மதன் என்ற ரவுடியை தனசேகர் தரப்பினர் கொலை செய்தனர். ஜாமீனில் வெளியில் வந்த தனசேகர், வழக்கு விசாரணைக்காக நேற்றிரவு அடையாறு துணை கமிஷனர் அலுவலகத்துக்கு பைக்கில் வந்தார். பிறகு தனியாக பைக்கில் திருவான்மியூர், அவ்வைநகர் பகுதியில் சென்றுகொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த ஒரு கும்பல், தனசேகரை வழிமறித்தது, கண்இமைக்கும் நேரத்தில் அரிவாள், கத்தியால் சரமாரியாக வெட்டிச் சாய்த்தது. இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த தனசேகர் உயிருக்குப் போராடினார். இதுகுறித்து திருவான்மியூர் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் அங்கு சென்று தனசேகரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், தனசேகர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். 

இதுகுறித்து திருவான்மியூர் போலீஸார் கூறுகையில், ``ரவுடி தனசேகரின் மனைவியை கடந்த 2013-ம் ஆண்டு ரவுடி மதன் என்பவர் கிண்டல் செய்துள்ளார். அதற்காக மதன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மேலும், வழக்கு விசாரணைக்காகதான்  தனசேகர் அடையாறு துணை கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். திரும்பிச் செல்லும்போதுதான் இந்தக் கொலை நடந்துள்ளது. ரவுடி மதன் தரப்பினர் பழிக்குப் பழியாக தனசேகரைக் கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இந்த வழக்கில் 2 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது" என்றனர்.

 கொலை நடந்த இடம்

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அடையாறு காவல் நிலையம் அருகில் இன்று காலை இன்னொரு கொலை நடந்துள்ளது. அடையாறு மல்லிகை நகரைச் சேர்ந்தவர் சுரேஷ். ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகிறார். வழக்கம்போல இன்று காலை குழந்தைகளைப் பள்ளிக்கு பைக்கில் அழைத்துச் சென்றார். அப்போது பள்ளியின் அருகில் காத்திருந்த கும்பல், சுரேஷை அரிவாள், கத்தியால் வெட்டியது. அதில் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அடையாறு போலீஸார் விசாரித்துவருகின்றனர். 

அடையாறு போலீஸார் கூறுகையில், ``சுரேஷ், ரியல் எஸ்டேட்தொழில் செய்துவந்துள்ளார். தொழில் போட்டிக் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்க வாய்ப்புள்ளது. சுரேஷ் கொலை செய்யப்பட்ட பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் கொலை நடந்த காட்சி பதிவாகியுள்ளது. அதை நாங்கள் ஆய்வு செய்துவருகிறோம். ஆட்டோவில் வரும் கொலைக் கும்பல், சுரேஷை வெட்டிவிட்டு பிறகு அதே ஆட்டோவில் தப்பிச் செல்கிறது. இதனால், கொலையாளிகளை விரைவில் பிடித்துவிடுவோம்" என்றனர்.

அடையாறு காவல் சரகத்தில் அடுத்தடுத்து இரண்டு பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.