ரேக்ளா போட்டியில் அதிர்ந்த 5 மாவட்ட காளைகள்! முதல் பரிசை வென்றது ராமநாதபுரம் காளை

விளாத்திகுளம் வீரகாஞ்சிபுரம் கிராமத்தில் பத்திரகாளி அம்மன் கோயில் ஆனிப் பொங்கல் விழாவை முன்னிட்டு மாட்டு வண்டிப்  போட்டிகள் நடைபெற்றன. இதில் 25 ஜோடி மாடுகள் கலந்துகொண்டன. 

மாட்டு வண்டிப்  போட்டி

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், வீரகாஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீ பத்திரகாளியம்மன் திருக்கோயில் ஆனி பொங்கல் விழாவை முன்னிட்டு, சின்னமாட்டு வண்டி, பூஞ்சிட்டு என 2 பிரிவுகளில் மாட்டு வண்டிப் போட்டிகள் நடைபெற்றன. இதில், 12 கிலோ மீட்டர் தூரம் கொண்ட சின்ன மாட்டு வண்டிப் போட்டியில் 12 ஜோடி மாடுகள் மற்றும் 10 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற மாட்டு வண்டிப் போட்டியில் 13 ஜோடி மாடுகள் என நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 25 ஜோடி மாடுகள் பங்கேற்றன.

ரேக்ளா போட்டி

சின்ன மாட்டுவண்டிப் போட்டியில் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த புல்லட் அலியார் என்பவரது மாட்டு வண்டி முதலிடமும், மதுரை மாவட்டம் பரவை கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீமுத்து நாயகி என்பவரது மாட்டு வண்டி 2-ம் இடத்தையும் ராமநாதபுரம் மாவட்டம் ஏனாதியைச் சேர்ந்த பாண்டி என்பவரது மாட்டு வண்டி 3-வது இடத்தையும் பிடித்தன. 

இதேபோல, பூஞ்சிட்டு மாட்டு வண்டிப் போட்டியில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சிதம்பரநகரைச் சேர்ந்த அருண்பாண்டி என்பவரது மாட்டுவண்டி முதல் பரிசையும் தட்டிச்சென்றது. நெல்லை மாவட்டம்  வேலங்குளம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரது மாட்டு வண்டி 2-வது இடத்தையும் பெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், உசிலங்குளம் கருப்புத்துறையைச் சேர்ந்த பாண்டி என்பவரது  மாட்டு வண்டி 3-வது இடத்தையும்  பிடித்தது. 

பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாட்டுவண்டிகளின் உரிமையாளர்களுக்கும் முதல் கொடி வாங்கிய சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மாட்டுவண்டிப் போட்டிகளைக் காண சாலை ஓரங்களில் மக்கள் திரண்டிருந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!