வெளியிடப்பட்ட நேரம்: 15:25 (12/07/2018)

கடைசி தொடர்பு:15:25 (12/07/2018)

`நீட் விவகாரத்தில் நான் தமிழக மாணவர்கள் பக்கம்தான்'- தமிழிசை!

நீட் விவகாரத்தில் நான் தமிழக மாணவர்கள் பக்கம்தான் இருக்கிறேன் என்று பா.ஜ.க மாநிலத்தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழிசை

சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில், மஹாவதர் மகளிர் மன்றம் சார்பில் நடைபெற்ற யோகா பயிற்சி நிகழ்ச்சியில் தமிழக பி.ஜே.பி. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``மோடி ஜூன் 21 -ம் தேதியை யோகா தினமாகக் கொண்டாடப்படும் என்று அறிவித்ததன் மூலம் மாணவர்களின் மன நலம் பாதுகாக்கப்பட்டுள்ளது.  தற்போது உள்ள குழந்தைகளுக்கு பண்பாட்டு வகுப்பு என்பது இல்லை. மதிப்பெண்களைக் கூட்டும் வகையில் பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. பாடத்திட்டம் அமைப்பதில் தமிழக பள்ளிக்கல்வித் துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அமித் ஷா நிர்வாக ஊழல் நடைபெறுகிறது என்றுதான் சொன்னார். எந்தக் கட்சியையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.

வாக்குக்கு பணம் கொடுத்து தேர்தல் ரத்தானதெல்லாம் இங்கு நடந்துள்ளது. பொன். மாணிக்கவேல் பணி தொடர வேண்டும். அவரின் சிலை கண்டுபிடிக்கும் பணி தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதற்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம். ஒரே நாடு ஒரு தேர்தல் என்பது வழிமுறை. இதன்மூலம் தேர்தல் செலவுகள் குறையும். இதுகுறித்து அனைத்துக் கட்சிகளிடம் கருத்து கேட்புகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இதுகுறித்து தீர்மானிப்போம். அமித் ஷா தவறான கருத்துகளை சொல்லவில்லை என்று சி.பி.எம். பாலகிருஷ்ணனுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.  அதேபோல் ’உதான் திட்டம்’ மூலம் 10 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடித்துள்ளோம். இதன்மூலம் லட்சக்கணக்கான மக்களுக்கு ரேஷன் பொருள்கள் கிடைக்க வழி வகுக்கும். தி.மு.க, காங் கொடுக்காத முக்கியத்துவத்தை, நாடாளுமன்றத்தில் எந்த மொழியிலும் பேசலாம் என்று பி.ஜே.பி கொண்டுவந்துள்ளது. எனவே, 22 மொழிகள் பாராளுமன்றத்தில் ஒலிக்க உள்ளது. நீட் விவகாரத்தில் நான் தமிழக மாணவர்கள் பக்கம்தான் இருக்கிறேன். மொழிப்பெயர்ப்பு மூலம் மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது. நீட் மொழிப்பெயர்ப்பு அதிகாரிகள் கவனமாக இருந்திருக்க வேண்டும். எனவே, தவறு இழைத்த மொழிப் பெயர்ப்பாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும்' எனத் தெரிவித்தார்.