டூவீலர் திருடர்களிடமிருந்து பணப்பையைக் காப்பாற்றிய திருச்சிப் பெண்..

திருச்சியில், திருடர்களிடமிருந்து தனது பணப்பையைக் காப்பாற்றப் போராடிய பெண் ஒருவரை, சாலையில் தரதரவென இழுத்துச் செல்லும் சி.சி.டி.வி வீடியோ காட்சி சமீபத்தில் வெளியானது. கொள்ளையர்களிடம் பணத்தைப் பறிகொடுக்காமல் உயிரைப் பணயம் வைத்துத் தக்க வைத்துக்கொண்ட பெண்ணின் சாமர்த்தியத்தைப் பலரும் பாராட்டி வருகின்றனர். 

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த அம்மாபட்டியைச் சேர்ந்த சுப்பிரமணியன். இவரது மனைவி கிருஷ்ணவேணி கூலி வேலை செய்துவருகிறார். கிருஷ்ணவேணியின் தம்பி கண்ணன். இவர் சொந்தமாக வீடு கட்டி வருகிறார். இதற்காக தன் அக்காள் கிருஷ்ணவேணியிடம் கடனாகக் கேட்டுள்ளார். இதை அடுத்து கிருஷ்ணவேணி, கடந்த 9 ம் தேதி மாலை துறையூர் மதுராபுரியில் இயங்கி வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உள்ள தனது வங்கிக் கணக்கிலிருந்து 90 ஆயிரம் ரூபாயை எடுத்துள்ளார். பின்னர் வீடு திரும்புவதற்காக வங்கியிலிருந்து வெளியேறி நடந்து வந்து கொண்டிருந்தபோதுதான், கிருஷ்ணவேணிக்கு அந்தத் துயரம் ஏற்பட்டது.

திருச்சியில் டூவீலர் திருடர்கள்

இருசக்கர வாகனத்தில், கிருஷ்ணவேணியைப் பின் தொடர்ந்து வந்த இரண்டு மர்ம நபர்கள், ஆள் அரவம் இல்லாத இடம்  வந்ததும், கிருஷ்ணவேணி பணம் வைத்திருந்த பையைப் பறிக்க முயன்றனர். பைக்கின் பின்புறம் அமர்ந்திருந்தவன், பையைப் பிடித்து இழுத்தார். உடனடியாகச் சுதாகரித்துக் கொண்ட கிருஷ்ணவேணி, சாதூர்யமாக தன் பையை கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். இதனால், கிருஷ்ணவேணி, சாலையில் தடுமாறி கீழே விழுந்தார். ஆனாலும் மர்ம நபர்கள் பையை விடாமல் பிடித்திழுக்க, தரதரவென இழுத்துச் செல்லப்பட்டார். ஆனால், அந்த நிலையிலும்கூட கிருஷ்ணவேணி, பையை விடவில்லை. கிருஷ்ணவேணியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதையடுத்து திருடர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனால் கிருஷ்ணவேணி, கையில் வைத்திருந்த 90 ஆயிரம் ரூபாய் பணம் தப்பியது. காயமடைந்த கிருஷ்ணவேணி, வங்கி அதிகாரிகளிடமும், துறையூர் காவல் நிலையத்திலும் இதுகுறித்துப் புகார் அளித்தார். இதையடுத்து, வழக்கு பதிவு செய்த போலீஸார் மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். இந்த நிலையில் போலீஸார் நடத்திய விசாரணையில், சி.சி.டி.வி கேமிரா பதிவுகள் கிடைத்துள்ளன. வங்கிக்குப் பணம் எடுக்கப் போன கிருஷ்ணவேணியை நீண்ட நேரமாக மர்ம நபர்கள் கண்காணித்துள்ளனர். பின், ஆள் இல்லாத நேரம் பார்த்து கைப்பையைப் பறிக்க முயன்றது வீடியோவில் பதிவாகி உள்ளது.  

கிருஷ்ணவேணியின் உறவினர்கள் நம்மிடம்,

``துறையூர் பகுதிகளில் கொள்ளை மற்றும் வழிப்பறிச் சம்பவங்கள் அதிகரித்து விட்டன. தனியாக சாலையில் நடந்து போக முடியவில்லை. வீட்டு வாசலில் கோலம் போட முடியவில்லை. நகை, பணத்துக்கு மட்டுமல்ல... உயிருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. கிருஷ்ணவேணி உயிரைப் பணயம் வைத்து பணத்தை மீட்டுள்ளார்.  குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!