’கடலுக்குள் செல்ல முடியவில்லை!’ -தூத்துக்குடி மீனவர்களின் சோகம்

பலத்த சூறாவளிக் காற்றின் காரணமாக தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் மூன்றாவது நாளாக இன்றும் 245 விசைப்படகுகள்  கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.  இதனால் 2,000 மீனவர்கள் நேர்முகமாகவும், 3,000 மீனவத் தொழிலாளரகள் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

சூறாவளிக் காற்று காரணமாக நிறுத்திவைக்கப்படுள்ள படகுகள்

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தை தங்குதளமாகக் கொண்டு 245 விசைப்படகுகள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்று வருகின்றன. இந்த விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் மற்ற மாவட்டங்களில் நடைமுறையில் இருப்பது போல தங்களுக்கும் தங்கு கடலுக்கு அனுமதி வேண்டும் என விசைப்படகு மீனவர்கள் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு விண்ணப்பித்தனர்.

இதில், 71 விசைப்படகுகள் மட்டுமே தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டம் 1983-ன் படி முறையாக பதிவு செய்யப்பட்டவை. மீதமுள்ள படகுகள் பதிவு செய்யப்படாதவை. இதன்படி, பதிவு செய்யப்படாத படகுகள் மின்பிடிக்க அனுமதிக்கப்படவில்லை. பதிவு செய்யப்படாத விசைப்படகுகளை மீன்பிடிக்க அனுமதிக்காததால், பதிவு செய்யப்பட்ட விசைப்படகுகளும் கடந்த 9 மாதமாக கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.  இந்நிலையில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் முதல் மே வரை 60 நாட்கள் தடை விதிக்கப்பட்டு இருந்தது.

இந்த தடைக்காலம் முடிந்தும், விசைப்படகு பதிவு செய்யப்படாத பிரச்னைகள் தீர்க்கப்படாத காரணத்தினால் விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இந்நிலையில், விசைப்படகு பதிவு செய்யப்படுவதற்காக விதிமுறைகள் தளர்த்தப்பட்டு அரசு, அரசாணை வெளியிட்டதன் மூலம், தடைக்காலம்  முடிந்தும்  11 நாட்கள்  கழித்தும், ஏற்கெனவே 9 மாதம் கடலுக்குள் செல்லத் தடை என சுமார் 10 மாதங்களுக்குப் பிறகு,  கடந்த ஜூன் 25 -ம் தேதி முதல் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.

இந்நிலையில், தற்போது சூறாவளிக் காற்று பலமாக வீசுவதால் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் கடலுக்குள் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை மூலம் மீனவர்களுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. அறிவிப்பின்படி, மீனவர்கள் கடந்த 2 நாட்களாக கடலுக்குள் மின்பிடிக்கச் செல்லவில்லை. ஆனால், சூறாவளிக் காற்றின் வேகம் குறையாததால் மூன்றாவது நாளாக இன்றும் விசைப்படகுகள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

இதனால், 245 படகுகளும் மீன்பிடித் துறைமுகக் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், 2,000 மீனவர்கள் நேரடியாகவும் மீன் கூடை சுமப்போர், ஐஸ் பார் உடைப்போர், கை இழுவை வண்டி இழுப்போர், மீன் வண்டி தொழிலாளர்கள் என 3,000 மறைமுக மீனவத் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!