`நான் கேட்டது பொம்மைத் துப்பாக்கி அல்ல'- போலீஸாரை மிரள வைத்த மஞ்சுளா

துப்பாக்கி வாங்கிய மஞ்சுளா

`மகனைக் கொன்றவனை கொல்லத்தான் துப்பாக்கி வாங்கினேன்' என்று அரசு ஊழியரான இளம்பெண், போலீஸாரிடம் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை நெசப்பாக்கம் பாரதிநகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். உள் அலங்கார வேலை செய்துவரும் இவர், சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரியத்தில் பணியாற்றும் மஞ்சுளாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ரித்தேஸ் சாய் என்ற 10 வயது மகன் இருந்தார். இவர், அந்தப் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்தார். கடந்த பிப்ரவரி மாதம், ராமாபுரத்தில் உள்ள ஒருவீட்டில் இந்தி டியூசன் படிக்கச் சென்ற ரித்தேஸ் சாய், வீட்டுக்குத் திரும்பவில்லை.

இதுகுறித்து கார்த்திகேயன் போலீஸில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸார் விசாரித்தபோது, கார்த்திகேயன் வீட்டுக்கு அடிக்கடி வரும் சேலையூரைச் சேர்ந்த நாகராஜன், ரித்தேஸ்சாயைக் கொலைச் செய்தது தெரியவந்தது. நாகராஜன் போலீஸாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் மஞ்சுளாவுக்கும் தனக்கும் நட்பு இருந்தது. அதில் ஏற்பட்ட தகராறில்தான் ரித்தேஸ்சாயைக் கொன்றதாகக் கூறியிருந்தார். இதையடுத்து நாகராஜனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் நடந்து சில மாதங்கள் கடந்த நிலையில், மஞ்சுளாவை துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் சைதாப்பேட்டை போலீஸார் கைது செய்துள்ளனர். மஞ்சுளாவுக்கு துப்பாக்கி வாங்கி கொடுத்ததாக அவரின் நண்பர்கள் பிரசாந்த், சுரேஷ் ஆகியோர் மீதும் போலீஸாரிடம் பிடிப்பட்டுள்ளனர். 

 நாகராஜ்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``மகனைக் கொன்ற நாகராஜனைக் கொலைச் செய்ய மஞ்சுளா திட்டமிட்டுள்ளார். இதற்காக, பிரசாந்த், சுரேஷ் ஆகியோரிடம் துப்பாக்கி கேட்டுள்ளார். அதற்காக 2,00,000 ரூபாயை அவர்களிடம் மஞ்சுளா கொடுத்துள்ளார். அவர்களும் துப்பாக்கி ஒன்றை மஞ்சுளாவிடம் கொடுத்துள்ளனர். அது, பொம்மைத் துப்பாக்கி என்று மஞ்சுளாவுக்குத் தெரியவந்ததும் பிரசாந்த், சுரேஷிடம் தகராறு செய்துள்ளார். இந்தத் தகவல் எங்களுக்கு கிடைத்ததும் மூன்று பேரிடம் விசாரித்து மஞ்சுளா, பிரசாந்த், சுரேஷ் ஆகியோரை  கைது செய்துள்ளோம்" என்றனர். 

 ``நாகராஜனால் நான் பல துன்பங்களையும் துயரங்களையும் சந்தித்துள்ளேன். அவர் சிறைக்குச் செல்லக் காரணமான என்னையும், என் குடும்பத்தையும் சும்மா விடமாட்டார் என்று எனக்குப் பயம் இருந்தது. மேலும், ஆசையாக வளர்த்த மகனைக் கொன்ற நாகராஜனைப் பழிவாங்க வேண்டும் என்ற வெறியும் இருந்தது. இதனால்தான் துப்பாக்கி வாங்கினேன். ஆனால், பிரசாந்த், சுரேஷ் ஆகியோர் என்னை ஏமாற்றிவிட்டனர்" என்று மஞ்சுளா கூறியதாக போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!